அம்பானி வீட்டருகே வெடிகுண்டு கார் வழக்கில் கைதான போலீஸ் அதிகாரி சச்சின் வாசேயின் என்.ஐ.ஏ. காவல் 7-ந் தேதி வரை நீட்டிப்பு


அம்பானி வீட்டருகே வெடிகுண்டு கார் வழக்கில் கைதான போலீஸ் அதிகாரி சச்சின் வாசேயின் என்.ஐ.ஏ. காவல் 7-ந் தேதி வரை நீட்டிப்பு
x
தினத்தந்தி 3 April 2021 7:52 PM GMT (Updated: 3 April 2021 7:52 PM GMT)

முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிகுண்டு கார் வழக்கில் கைதான போலீஸ் அதிகாரியின் என்.ஐ.ஏ. காவலை வருகிற 7-ந் தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

வெடிகுண்டு கார் வழக்கு

தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே கடந்த பிப்ரவரி மாதம் 25-ந் தேதி வெடிகுண்டு கார் மீட்கப்பட்டது. இந்த வெடிகுண்டு காரின் உரிமையாளரான தானேயை சேர்ந்த வியாபாரி ஹிரன் மன்சுக் கடந்த மாதம் (மார்ச்) 5-ந் தேதி கொலை செய்யப்பட்ட நிலையில் மும்ரா கழிமுக கால்வாயில் மீட்கப்பட்டார்.

இதையடுத்து வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) கையில் எடுத்து விசாரித்தது. வெடிகுண்டு கார் வழக்கில் கடந்த மாதம் 13-ந் தேதி மும்பை குற்ற புலனாய்வு பிரிவு உதவி இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சச்சின் வாசே கைது செய்யப்பட்டார். ஹிரன் மன்சுக் கொலை வழக்கிலும் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

காவல் நீட்டிப்பு

இது தொடர்பாக சச்சின் வாசேயிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது என்.ஐ.ஏ. காவல் 2-வது முறையாக நேற்று முடிவடைந்தது. இதையடுத்து அவர் மீண்டும் மும்பையில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வழக்கில் கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகள், மடிக்கணினி ஆகியவற்றை வைத்து சச்சின் வாசேயிடம் விசாரணை நடத்த வேண்டியது இருப்பதால், மேலும் 7 நாட்கள் அவரை தங்களது காவலில் ஒப்படைக்க வேண்டும் என்று என்.ஐ.ஏ. தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டார்.

இதற்கு சச்சின் வாசே தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, கைதான போலீஸ் அதிகாரி சச்சின் வாசேயின் என்.ஐ.ஏ. காவலை 7-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.


Next Story