துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் நூதன முறையில் கடத்திய ரூ.37¼ லட்சம் தங்கம் பறிமுதல்


துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் நூதன முறையில் கடத்திய ரூ.37¼ லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 4 April 2021 10:14 PM GMT (Updated: 4 April 2021 10:14 PM GMT)

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.37¼ லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.

மங்களூரு: துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.37¼ லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த பயணி கைது செய்யப்பட்டுள்ளார். 

சுங்க வரித்துறையினர் சோதனை

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு துபாய், சார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும், மும்பை உள்ளிட்ட உள்நாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றன. சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து மங்களூருவுக்கு வரும் விமானங்களில் தங்கம், போதைப்பொருட்கள், வெளிநாட்டு பணம் கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. 

இதனை தடுக்க மங்களூரு விமான நிலையத்தில் சுங்க வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கவரித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். 

நூதன முறையில் கடத்தல்

இந்த நிலையில் நேற்று காலை துபாயில் இருந்து மங்களூருவுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்க வரித்துறை அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினார்கள். 

அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் சுங்க வரித்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் அந்த நபரை பிடித்து அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவரிடம் தீவிர சோதனை நடத்தினார்கள். 

அப்போது அந்த நபர், கேப்சூலில் தங்கத்தை வைத்து அதனை விழுங்கி வயிற்றுக்குள் வைத்து நூதன முறையில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சுங்க வரித்துறை அதிகாரிகள் அந்த நபரின் வயிற்றுக்குள் இருந்த தங்கத்தை பறிமுதல் செய்துகொண்டனர். 

ரூ.37¼ லட்சம் தங்கம் பறிமுதல்

அந்த நபரிடம் இருந்து ரூ.37¼ லட்சம் மதிப்பிலான 802 கிராம் தங்கத்தை சுங்க வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துகொண்டனர். இதையடுத்து அந்த நபரை சுங்க வரித்துறை அதிகாரிகள், பஜ்பே போலீசாரிடம் ஒப்படைத்தனர். பஜ்பே போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். 

விசாரணையில், அவர் கேரள மாநிலம் காசர்கோடு நகரை சேர்ந்த நவ்சாத் திரிகுலாத் (வயது 37) என்பது தெரியவந்தது. இதுகுறித்து பஜ்பே போலீசார் வழக்குப்பதிவு செய்து நவ்சாத்தை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மங்களூரு பஜ்பே சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் கடத்தி வந்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.1.56 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story