கேரள தேர்தலில் 74 சதவீத வாக்குப்பதிவு; ஆட்சியை தக்கவைத்து இடதுசாரி கூட்டணி சாதிக்குமா?


கேரள தேர்தலில் 74 சதவீத வாக்குப்பதிவு; ஆட்சியை தக்கவைத்து இடதுசாரி கூட்டணி சாதிக்குமா?
x
தினத்தந்தி 7 April 2021 1:55 AM IST (Updated: 7 April 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

கேரள சட்டசபை தேர்தலில் 74 சதவீத வாக்குகள் பதிவாகின. அங்கு ஆட்சியைத் தக்கவைத்து இடதுசாரி கூட்டணி சாதனை படைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கேரள சட்டசபை தேர்தல்
முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரி கூட்டணி ஆட்சி நடக்கிற கேரளாவில், சட்டசபையின் ஆயுள்காலம் ஜூன் 1-ந் தேதி முடிகிறது.இந்த நிலையில் 140 இடங்களை கொண்டுள்ள கேரள சட்டசபைக்கு தமிழக சட்டசபை தேர்தலுடன் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.இதே போன்று அங்கு காலியாக இருந்த மலப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.கேரளாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இடதுசாரிகளிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றுவதற்கு காங்கிரஸ் கட்சி கடும் முயற்சியில் இறங்கி உள்ளது. ஆனால் காங்கிரசுக்கு பா.ஜ.க. புதிய சவாலாக அமைந்துள்ளது.மும்முனை போட்டியை சந்திக்கிற கேரளாவில் ஆட்சியைத் தக்க வைத்து, இடதுசாரி கூட்டணி புதிய சரித்திரம் படைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

களத்தில் முக்கிய தலைவர்கள்
அங்கு 140 இடங்களுக்கு 957 வேட்பாளர்கள் போட்டி போடுகின்றனர். இவர்களது தலையெழுத்தை நிர்ணயிக்கிற உரிமையை 2.74 கோடி வாக்காளர்கள் பெற்றிருந்தனர். ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கையை விட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை இங்கு அதிகம் ஆகும்.மாநில போலீசார் 59 ஆயிரம் பேர் மற்றும் 140 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில்
ஈடுபடுத்தப்பட்டனர். 13 ஆயிரத்து 830 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தேர்தலில் முக்கிய வேட்பாளர்களாக முதல்-மந்திரி பினராயி விஜயன், முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி 
(காங்கிரஸ்), ரமேஷ் சென்னிதலா, கே.முரளீதரன் (காங்கிரஸ்), கும்மணம் ராஜசேகரன், மெட்ரோ ரெயில் மனிதர் ஸ்ரீதரன், நடிகர் சுரேஷ் கோபி (பா.ஜ.க.) உள்ளிட்டோர் களம் கண்டனர்.140 சட்டசபை தொகுதிகளிலும், மலப்புரம் நாடாளுமன்ற தொகுதியிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதல் வாக்காளர்கள் கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றி முக கவசத்துடன் வந்து, கையுறை அணிந்து வாக்குப்பதிவு செய்தனர்.

மீண்டும் எதிரொலித்த சபரிமலை விவகாரம் முதல்-மந்திரி  பினராயி விஜயன், கண்ணூரில் ஆர்.சி.அமலாபள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கைப்பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசுகையில், “எங்கள் இடதுசாரி கூட்டணி கடந்த தேர்தலை விட கூடுதலான இடங்களை கைப்பற்றும். நாங்கள் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெறுவோம்” என கூறினார்.முதல்-மந்திரி பினராயி விஜயன், “சபரிமலை அய்யப்பனும், மற்ற 
தெய்வங்களும் மக்கள் நலனுக்கு பாடுபட்டுள்ள இடதுசாரி அரசுடன் இருக்கின்றன” என தெரிவித்தது, வாக்குப்பதிவு நாளில் சபரிமலை விவகாரம் எதிரொலிக்க காரணமாயிற்று.சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10-50 வயது வரையிலான பெண்கள் வழிபாடு நடத்த தடை இருந்து வந்த நிலையில், 2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அதை அகற்றி எல்லா பெண்களும் வழிபாடு நடத்த அனுமதித்து தீர்ப்பு அளித்ததும், அதை அப்போது இடதுசாரிகூட்டணி அரசு நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்ததும் நினைவுகூரத்தக்கது.

பினராயி விஜயன் கருத்து குறித்து காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா பதில் அளிக்கையில், “இந்த தேர்தலில் இடதுசாரி அரசு அய்யப்பனின் கோபத்தையும், அவரது பக்தர்களின் கோபத்தையும் நிச்சயம் எதிர்கொள்ளும்” என சாடினார். பா.ஜ.க. தலைவர் கே.சுரேந்திரன், “3 ஆண்டுகளுக்கு முன்னர் முதல்-மந்திரி செய்தது அரக்கனின் செயல். அவரது மோசமான செயலை மாநில மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்” என சாடினார்.முன்னாள் காங்கிரஸ் முதல்-மந்திரி உம்மன்சாண்டி, “பினராயி விஜயன் சபரிமலையைப் பற்றி பேசினால், அவரது வார்த்தைகளை கேரளாவில் உள்ள ஒரு அய்யப்ப பக்தர்கூட நம்பமாட்டார். சபரிமலை விவகாரத்தில் அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை திரும்பபெற வலியுறுத்தியபோது, அவர் மறுத்து விட்டார். இப்போது தேர்தல் பயத்தில்தான் அய்யப்பன் பற்றி பேசுகிறார்” என கூறினார். 
மற்றொரு முன்னாள் காங்கிரஸ் முதல்-மந்திரியான ஏ.கே. அந்தோணி, “முதல்-மந்திரி பினராயி விஜயன், அய்யப்பனிடமும், அவரது பக்தர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என கூறினார்.

மோதல்
இதற்கிடையே கழக்கூட்டம் தொகுதியில் கள்ள ஓட்டு பிரச்சினையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரால் 4 பா.ஜ.க. தொண்டர்கள் தாக்கப்பட்டனர்.கண்ணூர் மாவட்டம் அந்தூரில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் வி.பி.அப்துல் ரஷீத்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரால் தாக்கப்பட்டார்.பாலுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் தர்மஜன் போல் கட்டியும் ஒரு வாக்குச்சாவடியில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினரால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. கலமச்சேரியில் ஒருவர் வாக்கை மற்றொருவர் செலுத்தி விட்டதாக தெரிய வந்தபோது அங்கு பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் பி.எஸ்.ஜெயராஜ் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.பல இடங்களில் மின்னணு வாக்கு எந்திரங்கள் பழுதுபட்டதாக கூறப்பட்டது.சிற்சில வன்முறை சம்பவங்கள் நடந்தாலும்கூட கேரளாவில் பொதுவாக வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. முடிவில் 74 சதவீத வாக்குகள் பதிவாகின.ஓட்டு எண்ணிக்கை அடுத்த மாதம் 2-ந் தேதி நடக்கிறது.

Next Story