ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் கர்நாடக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தினசரி ரூ.20 கோடி இழப்பு


ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் கர்நாடக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தினசரி ரூ.20 கோடி இழப்பு
x
தினத்தந்தி 8 April 2021 9:07 PM GMT (Updated: 8 April 2021 9:07 PM GMT)

ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தினசரி ரூ.20 கோடி இழப்பு ஏற்படுவதாக அரசு கூறியுள்ளது.

பெங்களூரு:

  கர்நாடக அரசின் போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் அஞ்சும் பர்வேஸ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சம்பள விகிதம்

  6-வது ஊதிய குழு பரிந்துரைப்படி சம்பள உயர்வு வழங்க கோரி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கழகங்களுக்கு தினசரி ரூ.20 கோடி இழப்பு ஏற்படுகிறது. அரசு ஊழியராக்க வேண்டும், 6-வது ஊதிய குழுப்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும் ஆகிய 2 கோரிக்கைகளை தவிர்த்து பிற கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்ட்டுள்ளன.

  இந்த 2 கோரிக்கைகளையும் நிறைவேற்றுவது என்பது இயலாத ஒன்று. தற்போதைய நெருக்கடி நிலையை ஊழியர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள விகிதம் மாற்றி அமைக்கப்படுகிறது. இதில் நல்ல சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது.

தனியார் பஸ்கள்

  அதனால் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு ஆஜராக வேண்டும். அதன் பிறகு பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. கர்நாடகத்தில் மொத்தம் 26 ஆயிரம் அரசு பஸ்கள் ஓடுகின்றன. இதில் பெங்களூருவில் மட்டும் 6 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றுக்கு இணையாக சுமார் 18 ஆயிரம் தனியார் பஸ்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

  இது மட்டுமின்றி அதிக எண்ணிக்கையில் ரெயில்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் மெட்ரோ ரெயில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
  இவ்வாறு அஞ்சும் பர்வேஸ் கூறினார்.

Next Story