கொரோனா பாதிப்பு: அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு மராட்டிய முதல் மந்திரி அழைப்பு


கொரோனா பாதிப்பு:  அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு மராட்டிய முதல் மந்திரி அழைப்பு
x
தினத்தந்தி 10 April 2021 7:14 AM GMT (Updated: 10 April 2021 7:14 AM GMT)

கொரோனா பாதிப்பு சூழலை எதிர்கொள்வது பற்றி அனைத்து கட்சி தலைவர்களுடனான கூட்டத்திற்கு மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்து உள்ளார்.

புனே,

நாட்டிலேயே மராட்டியத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  ஒருபுறம் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.  மறுபுறம் ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த சூழலில், தடுப்பூசி பற்றாக்குறையால் புனே, பன்வெல் உள்ளிட்ட மாநகராட்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு உள்ளன.

கொரோனா பாதிப்புகளை அதிகம் எதிர்கொண்டுள்ள மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதனை முன்னிட்டு மும்பை நகரில் வார இறுதி நாட்களான இன்றும் நாளையும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  அரசின் இந்த முடிவை அடுத்து மும்பை நகரில் ஊரடங்கு அமலுக்கு வந்தது.  இந்த ஊரடங்கு வரும் திங்கட்கிழமை காலை 6 மணிவரை அமலில் இருக்கும்.

எனினும் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வீட்டுக்கு எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.  பல்வேறு தேர்வுகளுக்காக செல்லும் மாணவ மாணவியருக்கும் அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

தொடர்ந்து பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இதன் ஒரு பகுதியாக அடுத்த கட்ட ஆலோசனையை அரசு மேற்கொள்ள உள்ளது.  இதன்படி, கொரோனா பாதிப்பு சூழலை எதிர்கொள்வது பற்றி அனைத்து கட்சி தலைவர்களுடனான கூட்டத்திற்கு மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்து உள்ளார்.

இந்த கூட்டம் காணொலி காட்சி வழியே நடைபெற உள்ளது.  இதில், தேவையான பகுதிகளில் ஊரடங்கை விரிவுபடுத்துவது, கட்டுப்பாட்டு மையங்களில் விதிகளை கடுமையாக கடைப்பிடிப்பது, இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளன.

Next Story