மர்ம நபர்கள் தீ வைத்ததால் விபரீதம்: காட்டுத்தீயை அணைக்க முயன்ற 3 தொழிலாளர்கள் கருகி சாவு - 2 பேர் படுகாயம்


மர்ம நபர்கள் தீ வைத்ததால் விபரீதம்: காட்டுத்தீயை அணைக்க முயன்ற 3 தொழிலாளர்கள் கருகி சாவு - 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 10 April 2021 4:40 PM GMT (Updated: 10 April 2021 4:40 PM GMT)

கோண்டியாவில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் பற்றிய காட்டுத்தீயை அணைக்க முயன்ற 3 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

மும்பை, 

கோண்டியா மாவட்டத்தில் நவேகாப்-நாக்ஜிரா புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் பயங்கரமாக தீ பற்றி எரிந்தது. இதையடுத்து வனத்துறையை சேர்ந்த தொழிலாளர்கள், ஊழியர்கள் என 60 பேர் சேர்ந்து காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மாலை 5 மணிக்கு அவர்கள் போராடி தீயை அணைத்தனர். ஆனால் பலத்த காற்று காரணமாக மீண்டும் தீ பரவியது. அப்போது தீயை அணைக்க முயன்றபோது, 5 தொழிலாளர்கள் தீயில் சிக்கி கொண்டனர். இதில் 3 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்கள் பெயர் ராகேஷ் மாதவி (வயது 40), ரெக்சந்த் ரானே (45), சச்சன் ஸ்ரீரங்கே (27) என்று தெரியவந்தது.

மேலும் 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

யாரோ மர்ம நபர்கள் தீ வைத்ததால் இந்த விபரீதம் நடந்ததாக தெரியவந்தது. இதையடுத்து மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.

Next Story