மம்தா பானர்ஜி தேர்தல் வன்முறையை தூண்டுகிறார் : அமித்ஷா குற்றச்சாட்டு


மம்தா பானர்ஜி தேர்தல் வன்முறையை தூண்டுகிறார் : அமித்ஷா குற்றச்சாட்டு
x

மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள உள்துறை மந்திரி அமித் ஷா, இன்று பல்வேறு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள உள்துறை மந்திரி அமித் ஷா, இன்று பல்வேறு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றுகிறார். நாடியா மாவட்டம் சாந்திபூரில் வாகன பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது கூஜ்பெகர் மாவட்டம் சிடால்குச்சி தொகுதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அவர் கூறியதாவது:-

மேற்கு வங்காளத்தில் இந்த ஒரு சம்பவம் (சிடால்குச்சி) தவிர, மற்ற இடங்களில் இதுவரை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, அரசியல் மற்றும் தேர்தல் தொடர்பான வன்முறைகள் முடிவுக்கு வரும் என்று உறுதியளிக்கிறேன். 

மம்தா பானர்ஜி நான்கு பேர் உயிரிழப்புக்கு மட்டுமே இரங்கல் தெரிவித்தார். ஆனால், ஐந்தாவதாக இறந்த ஆனந்த் பர்மன் ஒரு ராஜ்வன்ஷி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்காக ஒரு சொட்டு கண்ணீர்கூட சிந்தவில்லை. ஐந்தாவதாக கொல்லப்பட்ட நபருக்கு (ஆனந்த் பர்மன்) இரங்கல் தெரிவிக்கவும், தான் பேசியதற்காக வங்காள மக்களிடம் மன்னிப்பு கேட்கவும் மம்தா பானர்ஜிக்கு இன்னும் நேரம் உள்ளது.

மத்திய படையினரை முற்றுகையிடுங்கள் என்ற மம்தா பானர்ஜியின் ஆலோசனையே மத்திய தொழிற்படையினர் மீதான தாக்குதலுக்கு காரணம் ஆகும். தற்போது கூட உயிரிழப்புகளை அரசியலாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. ஜனநாயக திருவிழாவை அமைதியான முறையில் கொண்டாடுமாறு  நான் மேற்கு வங்க மக்களுக்கு பணிவான வேண்டுகோள் வைக்கிறேன்” என்றார்.

Next Story