மேற்கு வங்காளம் தேர்தல்: மம்தாவின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்


மேற்கு வங்காளம் தேர்தல்:  மம்தாவின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 16 April 2021 5:07 AM GMT (Updated: 16 April 2021 5:07 AM GMT)

மேற்கு வங்காளத்தில் எஞ்சி இருக்கும் 4 கட்ட தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்ற மம்தாவின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து உள்ளது.

 கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 135 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. எஞ்சிய 159 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. 

அந்த வகையில் 5-ம் கட்டமாக 45 தொகுதிகளுக்கு ஏப்ரல் 17-ம் தேதியும், 6-ம் கட்டமாக 43 தொகுதிகளுக்கு ஏப்ரல் 22-ம் தேதியும், 7-ம் கட்டமாக 36 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ம் தேதியும், கடைசியாக 8-ம் கட்டமாக 35 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. 

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் 45 தொகுதிகளுக்கு 5-ம் கட்ட தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது.

மேற்குவங்காளத்தில் தேர்தலின் போது வன்முறை சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றுவதால் பாதுக்காப்பு காரணங்களுக்காக தேர்தல் 8 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

இந்நிலையில், மேற்குவங்காளத்தில் எஞ்சிய 4 கட்ட தேர்தலையும் ஒரேநாளில் நடத்த வேண்டும் என்ற அம்மாநில முதல்மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்திற்கு  கோரிக்கை விடுத்துள்ளார். மேற்குவங்காளத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மக்களை காப்பாற்றும் வகையில் எஞ்சிய 4 கட்ட தேர்தலையும் ஒரேநாளில் நடத்த வேண்டும் என மம்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பெருந்தொற்று பரவி வரும் நிலையில் மேற்குவங்காளத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். தற்போது, கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், எஞ்சிய 4 கட்ட தேர்தலையும் ஒரேநாளில் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கிறேன். இது கொரோனா பரவலில் இருந்து மக்களை காப்பாற்றும்’ என தெரிவித்துள்ளார்.  

ஆனால்  அத்தகைய திட்டம் ஏதுமில்லை என்று தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.மேற்கு வங்காளத் தேர்தலில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக்  கூட்டத்தை இன்று தேர்தல் ஆணையம் கூட்டியுள்ளது.

ஒவ்வொரு கட்சியில் இருந்தும் ஒரு பிரதிநிதியை மட்டும் அனுப்புமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் கூட்டம் சேர்ப்பதால் கொரோனா பரவுகிறது என்ற புகாரையடுத்து அனைத்து தேர்தல்களையும் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் மம்தா பானர்ஜி வலியுறுத்தியிருந்தார்.

Next Story