தடுப்பூசி பற்றாக்குறை நிலவும் சூழலில் ‘தடுப்பூசி திருவிழா ஒரு கேலிக்கூத்து’ - ராகுல் காந்தி சாடல்


தடுப்பூசி பற்றாக்குறை நிலவும் சூழலில் ‘தடுப்பூசி திருவிழா ஒரு கேலிக்கூத்து’ - ராகுல் காந்தி சாடல்
x
தினத்தந்தி 16 April 2021 6:13 AM GMT (Updated: 16 April 2021 6:13 AM GMT)

தடுப்பூசி பற்றாக்குறை நிலவும் சூழலில் நடத்தப்பட்ட தடுப்பூசி திருவிழா ஒரு கேலிக்கூத்து என மத்திய அரசை ராகுல் காந்தி சாடியுள்ளார்.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 2 லட்சத்துக்கு அதிகமானோர் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

கொரோனாவின் வேகத்தை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணிகளை வேகப்படுத்த முயன்று வருகின்றன.

குறிப்பாக, பயனாளர்கள் அனைவரும் போட்டுக்கொள்ளும் வகையில் கடந்த 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தடுப்பூசி திருவிழா கடைப்பிடிக்க பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். அதன்படி இந்த நாட்களில் இந்த திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க, பயனாளர்களுக்கு போடுவதற்கு போதுமான தடுப்பூசி கையிருப்பு இல்லை என பல மாநிலங்கள் கூறியுள்ளன. பல இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இப்படி தடுப்பூசி பற்றாக்குறை நிலவும் சூழலில் தடுப்பூசி திருவிழா நடத்தியது கேலிக்கூத்தானது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘கொரோனா பரிசோதனை இல்லை, ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் இ்ல்லை, வெண்டிலேட்டர்கள் இல்லை, ஆக்சிஜன் இல்லை. தடுப்பூசி கூட இல்லை. ஆனால் ஒரு பாசாங்குத்தனமான திருவிழா மட்டும் இருக்கிறது’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் கொரோனா சூழலை எதிர்கொள்வதற்காக மிகப்பெரிய அளவில் நன்கொடை வசூலித்து சேர்க்கப்பட்ட பி.எம்-கேர்ஸ் நிதி என்னாச்சு? என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story