மேற்கு வங்காள மீதமுள்ள தேர்தல்; இரவு 7 மணி வரையே பிரசாரம் மேற்கொள்ள அனுமதி


மேற்கு வங்காள மீதமுள்ள தேர்தல்; இரவு 7 மணி வரையே பிரசாரம் மேற்கொள்ள அனுமதி
x
தினத்தந்தி 16 April 2021 2:33 PM GMT (Updated: 16 April 2021 2:33 PM GMT)

மேற்கு வங்காளத்தில் மீதமுள்ள சட்டசபை தேர்தலுக்கான பிரசார நேரம் இரவு 7 மணியாக குறைக்கப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

மேற்கு வங்காள சட்டசபைக்கான தேர்தல் 8 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.  நாளை 5வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.  மொத்தம் 45 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில் 39 பெண்கள் உள்பட 319 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் ஜல்பைகுரி, கலிம்போங், டார்ஜிலிங், நாடியா, வடக்கு 24 பர்கானாஸ் மற்றும் புர்பா வர்தமான் ஆகிய 6 மாவட்டங்களில் நடக்கிறது.  மேற்கு வங்காளத்தில் 5வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் கடந்த புதன்கிழமை முடிவடைந்தது.

கொரோனா பாதிப்பு உயர்வால் மேற்கு வங்காளத்தில் மீதமுள்ள தேர்தல்களை ஒன்றாக நடத்த கூடும் என கூறப்பட்டது.  ஆனால், 8 கட்ட தேர்தலில் மீதமுள்ள தேர்தல்களை ஒன்றாக நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் மீதமுள்ள தேர்தலுக்கான பிரசார நேரம் இரவு 7 மணியாக குறைக்கப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  இரவு 7 மணியில் இருந்து காலை 10 மணிவரை எந்த பிரசாரமும் மேற்கொள்ள அனுமதி இல்லை.  இதேபோன்று மீதமுள்ள 3 கட்ட தேர்தல்களிலும் 48 மணிநேரம் என்பதற்கு பதிலாக 72 மணிநேரத்திற்கு முன்பே பிரசாரங்களை முடித்து கொள்ள வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Next Story