உத்தரபிரதேசத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரேநாளில் 27,426 பேருக்கு கொரோனா


உத்தரபிரதேசத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரேநாளில் 27,426 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 16 April 2021 8:36 PM GMT (Updated: 16 April 2021 8:36 PM GMT)

உத்தரபிரதேசத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரேநாளில் 27 ஆயிரத்து 426 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லக்னோ,

மக்கள் தொகையின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் உத்தரபிரதேசம். இம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது.

அந்தவகையில், உத்தரபிரதேசத்தில் கடந்த புதன்கிழமை 20 ஆயிரத்து 510 பேருக்கும், வியாழக்கிழமை 22 ஆயிரத்து 439 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அம்மாநிலத்தில் வரும் மே மாதம் 15-ம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. 

அதன்படி, மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் புதிய உச்சமாக 27 ஆயிரத்து 426 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 93 ஆயிரத்து 720 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 676 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 6 ஆயிரத்து 429 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், அம்மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 33 ஆயிரத்து 461 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், உத்தரபிரதேசத்தில் கொரோனாவால் நேற்று ஒரேநாளில் 103 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அம்மாநிலத்தில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 583 ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக, உத்தரபிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்திற்கு கொரோனா தொற்று உறுது செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story