வேலை நிறுத்தத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்புங்கள்; அரசு போக்குவரத்து ஊழியர்களுங்கு கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


வேலை நிறுத்தத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்புங்கள்; அரசு போக்குவரத்து ஊழியர்களுங்கு கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 20 April 2021 3:47 PM GMT (Updated: 20 April 2021 3:47 PM GMT)

நேற்று 14-வது நாளாக போராட்டம் நீடித்த நிலையில், வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்புங்கள் என்று அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பயணிகள் அவதி

சம்பள உயர்வு உள்பட 9 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த 7-ந் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். நேற்று 14-வது நாளாக போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நீடித்தது. அரசு பஸ்கள் இயங்காததால் பயணிகள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.இந்த நிலையில் பெங்களூரு மெஜஸ்டிக்கில் இருந்து கடந்த 4 நாட்களாக வெளிமாவட்டங்களுக்கு 4 முதல் 5 அரசு பஸ்கள் இயங்கி வருகின்றன.

பஸ்கள் குறைப்பு

அதுபோல நேற்றும் மெஜஸ்டிக்கில் உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையத்தில் இருந்து ராய்ச்சூர், பல்லாரி, பெலகாவி, விஜயாப்புரா, தார்வார், ஹாசன், மங்களூரு உள்பட பல பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. அதுபோல மெஜஸ்டிக்கில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கும் கர்நாடக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. மெஜஸ்டிக்கில் இருந்து பெங்களூரு நகரின் ஒரு சில பகுதிகளுக்கு பி.எம்.டி.சி.பஸ்கள் இயங்கின. ஆனால் பெரும்பாலான பகுதிகளுக்கு தனியார் வாகனங்கள் இயக்கப்பட்டு இருந்தன.

மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து தேவனஹள்ளியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு 20-க்கும் மேற்பட்ட சொகுசு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் பயணிகள் வருகை குறைந்ததால் நேற்று விமான நிலயத்திற்கு இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை 5 ஆக குறைக்கப்பட்டது.

ஐகோர்ட்டில் வழக்கு

இதற்கிடையே கர்நாடகத்தில் நேற்று 6 ஆயிரத்து 572 அரசு பஸ்கள் இயக்கப்பட்டதாக போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. அதாவது கே.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் 2,732 பஸ்களும், பி.எம்.டி.சி. சார்பில் 1,376 பஸ்களும், வடகிழக்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழகம் சார்பில் 1,163 பஸ்களும், வடமேற்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழகம் சார்பில் 1,301 பஸ்களும் இயக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஒகா தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

ஆஜராக வேண்டும்

அப்போது தலைமை நீதிபதி, "தற்போது கொரோனா பரவல் காரணமாக நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் சம்பள உயர்வு வழங்க கோரி போராடுவது என்பது சரியல்ல. அரசு போக்குவரத்து ஊழியர்கள் தங்களின் கோரிக்கையை நிறுத்தி வைத்து உடனே பணிக்கு ஆஜராக வேண்டும்" என்று உத்தரவிட்டார். இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி போக்குவரத்து ஊழியர் சங்கத்திற்கு நோட்டீசு அனுப்பவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

இதனால் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு கட்டாயம் ஆஜராக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 14 நாட்கள் முடக்கத்திற்கு பிறகு புதன்கிழமை முதல் அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story