சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி போப்டே ஓய்வு பெற்றார்; “திருப்தியுடன் வெளியேறுகிறேன்” என பேச்சு


சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி போப்டே ஓய்வு பெற்றார்; “திருப்தியுடன் வெளியேறுகிறேன்” என பேச்சு
x
தினத்தந்தி 23 April 2021 8:21 PM GMT (Updated: 23 April 2021 8:21 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே ஓய்வு பெற்றார். என்னால் முடிந்தளவு சிறப்பாக செயல்பட்ட திருப்தியுடன் வெளியேறுகிறேன் என அவர் கூறினார்.

போப்டே ஓய்வு
சுப்ரீம் கோர்ட்டின் 47-வது தலைமை நீதிபதியாக கடந்த 2019-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 18-ந்தேதி பதவி ஏற்றவர், எஸ்.ஏ.போப்டே.அயோத்தி வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் இவர் தீர்ப்பு வழங்கி உள்ளார். கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் வழக்கு விசாரணையை காணொலி காட்சி வழியாக நடத்தினார். இதுவரை இல்லாத வகையில் இது நடந்தது.நேற்று அவர் பணி நிறைவு செய்து, ஓய்வு பெற்றார்.

கடைசிநாளில் கலவையான உணர்வுகள்...

இதையொட்டி அவர் நேற்று கூறியதாவது:-

இந்த கடைசி நாள் எனக்கு கலவையான உணர்வுகளைத் தூண்டுகிறது. இதை விவரித்து சொல்வது கடினம்.21 ஆண்டு காலம் நான் நீதிபதியாக இருந்து ஓய்வு பெறுகிறேன். சுப்ரீம் கோர்ட்டில் எனக்கு மிக செழுமையான அனுபவங்கள் வாய்த்தன. சகோதர நீதிபதிகளுடனான நட்புறவு அருமையாக அமைந்தது.நான் இந்த கோர்ட்டை விட்டு மகிழ்ச்சியுடனும், அற்புதமான வாதங்களின் நினைவுகளுடன், நல்ல நடத்தையுடன், நீதிக்கான உறுதிப்பாட்டுடன் நல்லெண்ணத்துடன் வெளியேறுகிறேன்.

திருப்தி
கொரோனா வைரஸ் தொற்று காலத்தில், காணொலி காட்சி வழியாக நீதிமன்ற விசாரணைகளை நடத்தியது, பதிவு செய்தலின்றி சாத்தியப்பட்டிருக்காது.நான் முடிந்தளவு சிறப்பாக செயல்பட்ட திருப்தியுடன் வெளியே செல்கிறேன். இந்த கோர்ட்டை என்.வி.ரமணா நன்றாக வழிநடத்துவார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

புகழாரம்
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பதவிக்காலம் குறைந்தது 3 ஆண்டுகளாவது இருக்க வேண்டும் என்ற கருத்தை அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வெளியிட்டார்.சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பேசுகையில், “தலைமை நீதிபதி போப்டே, ஒரு புத்திசாலித்தனமான நீதிபதியாக மட்டுமின்றி அற்புதமான நகைச்சுவை உணர்வைக்கொண்ட அன்பானவராக, அக்கறையுள்ள மனிதராகவும் அறியப்படுவார்” என புகழாரம் சூட்டினார்.

சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தலைவர் மூத்த வக்கீல் விகாஸ் சிங் பேசுகையில், “இது (65) ஓய்வு பெறும் வயதே இல்லை. நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை அதிகரித்து அரசியல் சாசனத்தை திருத்த வேண்டும்” என்ற வேண்டுகோளை விடுத்தார்.

Next Story