சத்தீஷ்காரில் எல்லை பாதுகாப்பு படை முகாம் மீது நக்சலைட்டுகள் திடீர் துப்பாக்கி சூடு


சத்தீஷ்காரில் எல்லை பாதுகாப்பு படை முகாம் மீது நக்சலைட்டுகள் திடீர் துப்பாக்கி சூடு
x
தினத்தந்தி 24 April 2021 6:08 PM GMT (Updated: 24 April 2021 6:08 PM GMT)

சத்தீஷ்காரில் எல்லை பாதுகாப்பு படை முகாம் மீது நக்சலைட்டுகள் குழு ஒன்று இரவில் திடீரென துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

கேன்கர்,

சத்தீஷ்காரின் சில பகுதிகளில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகிறது.  அவர்கள் ஊருக்குள் புகுந்து அவ்வப்பொழுது கிராமத்தினர் மீது தாக்குதல் நடத்தி விட்டு சென்று விடுவது வழக்கம்.  சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளால் கலெக்டர் ஒருவர் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.

சத்தீஷ்காரில் பான்சி மற்றும் பச்சேலி பகுதிகளுக்கு இடையே சென்று கொண்டிருந்த பயணிகள் ரெயில் ஒன்று நேற்று தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.  இந்த சம்பவத்தில் ரெயிலில் பயணம் செய்த 30 பேரும் பாதுகாப்புடன் உள்ளனர்.

நக்சலைட்டுகளின் சதியால் ரெயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது என தன்டேவாடா காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவ் அதிர்ச்சி தகவலை கூறினார்.

இந்நிலையில், சத்தீஷ்காரின் கேன்கர் மாவட்டத்தில் கொய்லிபேடா காவல் நிலையம் பகுதியில் அமைந்த எல்லை பாதுகாப்பு படை முகாம் ஒன்றின் மீது இரவு 8.30 மணியளவில் நக்சலைட்டுகள் குழு ஒன்று துப்பாக்கிகளை கொண்டு திடீரென சுட்டு தாக்குதல் நடத்தியது.

அவர்களின் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் எல்லை பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிகளால் சுட்டனர்.  இந்த சண்டை 15 முதல் 20 நிமிடங்கள் வரை நீடித்தது.  இருள் சூழ்ந்த நேரம் மற்றும் வனப்பகுதியை பயன்படுத்தி நக்சலைட்டுகள் அந்த பகுதியிலிருந்து தப்பியோடி விட்டனர்.  முகாமில் உள்ள அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர்.


Next Story