மராட்டியத்தில் ஒரே நாளில் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை


மராட்டியத்தில் ஒரே நாளில் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை
x
தினத்தந்தி 26 April 2021 9:23 PM GMT (Updated: 26 April 2021 9:23 PM GMT)

மராட்டியத்தில் ஒரே நாளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

5 லட்சத்திற்கும் மேல்...
நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. அதே நேரத்தில் மாநிலத்தில் தான் அதிகளவு கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் மாநிலத்தில் 5 லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஏப்ரல் 26-ந் தேதி (நேற்று) மாலை 6 மணி வரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். மாநிலத்தில் இதுவரை 1.48 கோடி பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர்.

6,155 மையங்கள்
தற்போது மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 155 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இதில் 5 ஆயிரத்து 347 அரசு மையங்கள் ஆகும். 808 தனியார் மையங்கள் உள்ளன. மாநிலத்தில் அதிகபட்சமாக கடந்த ஏப்ரல் 3-ந் தேதி 4 லட்சத்து 62 ஆயிரத்து 735 பேருக்கு தடுப்பூசி ேபாடப்பட்டு இருந்தது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் தடுப்பூசி போடுவதில் மராட்டியம் புதிய சாதனையை படைத்து உள்ளது. மராட்டியம் உள்பட நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

Next Story