இரட்டை முக கவசங்களை அணிந்து கொள்ளுங்கள்; மும்பை மேயர் கைகூப்பி வேண்டுகோள்
பொதுமக்கள் தயவு செய்து இரட்டை முக கவசங்களை அணிந்து கொள்ளுங்கள் என மும்பை மேயர் கைகூப்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மும்பை,
நாட்டில் முதன்முறையாக கொரோனா பாதிப்புகள் இன்று 4 லட்சம் பேருக்கு பதிவாகி உள்ளன. கொரோனாவை தடுக்க இந்தியாவில் அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளை பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதன்படி, கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் நாட்டில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
இதன்பின்னர் கடந்த மார்ச் 1ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மே 1ந்தேதியில் (இன்று) இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.
இந்தியாவிலேயே உற்பத்தியான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு அவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இதற்காக பல்வேறு மாநிலங்களும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து தயாராகி உள்ளன. எனினும், கொரோனா தடுப்பூசி வந்து சேராத நிலையில் 18-44 வயதுக்கு உட்பட்டவர்கள் யாரும் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டாம் என கர்நாடக அரசு கேட்டு கொண்டுள்ளது.
இதே காரணங்களுக்காக டெல்லியிலும் கொரோனா தடுப்பூசிகள் போடப்படாது என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் தொற்று பாதிப்பு அதிகமுள்ள மராட்டியத்தின் மும்பை நகரில் கொரோனா தடுப்பூசிகள் போடுவது பற்றி மும்பை மேயர் கிஷோரி பட்னாகர் இன்று விளக்கம் அளித்து உள்ளார்.
அவர் கூறும்பொழுது, கோவின் ஆப்பில் பதிவு செய்து, தகவல் வரபெற்றோர் தடுப்பூசி மையங்களுக்கு செல்லலாம். உங்களுக்கு தகவல் வரவில்லை எனில் அல்லது வரும்வரை யாரும் தடுப்பூசி மையங்களுக்கு செல்ல வேண்டாம்.
2வது டோசுக்கு வருபவர்களில் 45 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும். 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கு பதிவு செய்து, தகவல் வந்த பின்னரே தடுப்பூசி போடப்படும்.
தடுப்பூசிகள் வந்த பின்னர் தடுப்பூசி மையங்கள் செயல்படும். பொதுமக்கள் தயவு செய்து முக கவசங்களை அணிந்து கொள்ளுங்கள். அதுவும் கூட இரட்டை முக கவசங்களாக அணியுங்கள். மக்கள் தேவையின்றி தங்களது வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என கைகூப்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story