மத்திய அரசு அறிவிப்பின்படி மக்களுக்கு விரைவில் 5 கிலோ உணவு தானியம்; புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதி
மத்திய அரசு அறிவித்த 5 கிலோ உணவு தானியம் விரைவில் மக்களுக்கு வழங்கப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
கிருமி நாசினி
கொரோனா தொற்று தடுப்பு பணிக்காக தனியார் நிறுவனம் சார்பில் வழங்கிய கிருமிநாசினி, முக கவசம் ஆகியவற்றை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சுகாதார துறையிடம் ஒப்படைத்தார்.இந்த நிகழ்ச்சியில் கவர்னரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, ஏ.பி.மகேஸ்வரி, சுகாதாரத்துறை செயலாளர் அருண், தொழில்துறை செயலாளர் வல்லவன், கவர்னரின் செயலாளர் அபிஜித் விஜய் சவுத்ரி, சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் மோகன்குமார், மாநில சுகாதார இயக்கக திட்ட இயக்குனர் ஸ்ரீராமுலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்பின் கவர்னர் தமிழிசை சவுந்தராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மருத்துவ மாணவிகள்கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு சார்பில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருகிற 10-ந்தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. பணியாளர்களை தேர்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இறுதியாண்டு மருத்துவ மாணவிகளும் வீடு, வீடாக சென்று மருத்துவ பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஓய்வு பெற்றவர்களையும் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சமூக பொறுப்பு18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக 6 லட்சம் தடுப்பூசிகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
அவசியமின்றி வெளியில் நடமாடக்கூடாது. மக்களுக்கும் சமூக பொறுப்பு உள்ளது. இது தொற்று வியாதி. சமூக இடைவெளி கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவதன் மூலமாக தான் தொற்று பரவலை தடுக்க முடியும். மக்கள் கூடுவதை தடுக்கவே டீக்கடைகள் மூடப்பட்டன.
5 கிலோ தானியம்மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசு குடும்பத்துக்கு 5 கிலோ தானியங்கள் அறிவித்திருந்தது. அது விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப்படும். அரசியல் கட்சியினர் அந்தந்த பகுதிகளில் அரசு ஏற்படுத்தி இருக்கும் சமுதாய குழுக்களுடன் சேர்ந்து அரசுக்கு உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.