புதுச்சேரியில் மீண்டும் ஊரடங்கு; நாளை முதல் 15 நாட்களுக்கு அமல்


புதுச்சேரியில் மீண்டும் ஊரடங்கு; நாளை முதல் 15 நாட்களுக்கு அமல்
x
தினத்தந்தி 9 May 2021 5:11 AM GMT (Updated: 9 May 2021 5:11 AM GMT)

புதுச்சேரியில் நாளை முதல் 15 நாட்கள் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. 50 சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்கவும், காய்கறி, மளிகை, இறைச்சிக் கடைகள் மதியம் வரை திறந்து இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு
கொரோனா பரவல் தொடர்கதையாக இருந்து வரும் நிலையில் கடந்த 1ந் தேதி முதல் அறிவிக்கப்பட்டு இருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளையுடன் (திங்கட்கிழமை) முடிவடைகிறது.ஆனாலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இந்தநிலையில் தற்போது மேலும் பல கட்டுப்பாடுகள் விதித்து தளர்வுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து புதுவை மாநில உயர்மட்ட குழு செயலாளரும், அரசு செயலாளருமான அசோக்குமார் நேற்று இரவு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

காய்கறி, மளிகை கடைகள்
புதுவையில் நாளை (திங்கட்கிழமை) இரவு 10 மணி முதல் வருகிற 24ந் தேதி நள்ளிரவு வரை தளர்வுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கடற்கரை, பூங்காக்கள் எல்லா நாட்களிலும் மூடப்படும். சமூக நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள், விளையாட்டு கூடங்கள், பொழுதுபோக்கு இடங்கள், கல்வி நிறுவனங்களை மூட வேண்டும். கலாசார நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே தங்கி இருக்க வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.காய்கறி கடைகள், மளிகை கடைகள், பழங்கள் மற்றும் இறைச்சி, மீன் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டும் திறக்க வேண்டும். அந்த கடைகளில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த கூடாது. ‌ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், மால்களை மூட வேண்டும். மால்கள் மற்றும் பிற மூடிய நிறுவனங்கள் வழக்கமான பராமரிப்பு பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

செய்தி தாள்கள் விற்பனை
வீடுகளுக்கு சென்று உணவு விற்பனை செய்யலாம். ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது. ஓட்டல்களில் பார்சல் மட்டும் வழங்க வேண்டும். ஓட்டல் மற்றும் லாட்ஜ்களில் தங்கியுள்ளவர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளுக்கு சென்று உணவு வழங்க வேண்டும்.பால் விற்பனை மையம், மருத்துவமனைகள், மருத்துவ ஆய்வகங்கள், மருந்தகங்கள், கண் மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள், செய்தித்தாள்கள் வினியோகம், ஆம்புலன்ஸ், அனைத்து அவசர கால மருத்துவ சேவைகளும் வழக்கம் போல் செயல்படலாம்.சரக்கு போக்குவரத்து, பொது பயணிகள் போக்குவரத்து (பஸ், ஆட்டோ, டாக்சி) விவசாய விளை பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்கள், விவசாயம் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பஸ்களில் 50 சதவீத பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும்.வாடகை வாகனங்கள், டாக்சிகள் டிரைவரை தவிர 3 பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும். ஆட்டோக்களில் டிரைவரை தவிர 2 பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும்.

வழிபாட்டு தலங்கள்
அனைத்து வழிபாட்டு தலங்களையும் மூட வேண்டும். அத்தியாவசிய பூஜைகள், பிரார்த்தனைகள், சடங்குகளை பாதிரியார்கள் மற்றும் ஊழியர்கள் மட்டும் நடத்தலாம். மதம் தொடர்பான திருவிழாக்கள், கூட்டங்கள் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது.திருமணத்தில் 25 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இறப்பு, இறுதி சடங்கு நிகழ்ச்சியில் 20 பேர் மட்டும் கலந்து கொள்ளலாம். 

தொழிற்சாலைகள் செயல்படலாம்.நகராட்சி, தீயணைப்பு துறை, நீதிமன்றங்கள் ஐகோர்ட்டு உத்தரவு படியும், ஏ.டி.எம். நிறுவனங்கள், தொலை தொடர்பு நிறுவனங்கள், இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள், குடிநீர் வழங்குதல், தூய்மை பணி, மின்துறை, வீட்டு வேலை, தனியார் காவலர் சேவை வழக்கம் போல் செல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூர் கட்டுப்பாடு
வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்படும். அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் நபர்கள் உரிய அடையாள அட்டை அணிய வேண்டும். இவர்கள் அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பிராந்திய நிர்வாகிகள் தேவைப்பட்டால் உள்ளூர் கட்டுப்பாடுகள் விதித்துக் கொள்ளலாம்.

எச்சில் துப்பினால் அபராதம்
பொது இடங்களில் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். வேலை செய்யும் இடங்களிலும், வாகனங்களில் செல்லும் போதும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும். முடிந்த வரை வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து நிறுவனத்திலும் பணியாளர்கள் உள்ளே நுழையும் இடத்தில் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும். சோப்பு பயன்படுத்தி கைகளை கழுவ ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது சானிடைசர் வழங்க வேண்டும்.பணி செய்யும் இடங்களில் அடிக்கடி கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்த வேண்டும். பணி செய்யும் இடங்களில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story