கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக பிரான்சில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை இறக்குமதி செய்யும் நடிகர் சோனு சூட்


கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக பிரான்சில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை இறக்குமதி செய்யும் நடிகர் சோனு சூட்
x
தினத்தந்தி 10 May 2021 7:58 PM GMT (Updated: 10 May 2021 7:58 PM GMT)

நடிகர் சோனு சூட் கொரோனா நோயளிகளின் சிகிச்சைக்காக பிரான்சில் இருந்து 4 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை இறக்குமதி செய்ய உள்ளார்.

மும்பை,

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை அதிதீவிரமடைந்து வருகிறது. நேற்று காலை வெளியான தகவலில் நாடு முழுவதும் புதிதாக 3 லட்சத்து 54 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த கொரோனா பாதிப்பு 2 கோடியே 26 லட்சமாக அதிகரித்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, ஆக்சிஜன், தடுப்பூசி, மருந்துகள், படுக்கை வசதி உள்ளிட்டவற்றிற்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதற்கிடையில், அரசுகள் மட்டுமின்றி தனிநபர்களும், தனியார் தொண்டு நிறுவனங்களும், தனியார் அமைப்புகளும், திரைத்துறையினரும் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன.

குறிப்பாக, பாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் ஆக்சிஜன் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை சமூக வலைதளம் மூலம் சோனு சூட்டிம் உதவி கேட்கின்றனர். அவ்வாறு உதவிகேட்கும் நபர்களுக்கு சோனு சூட் தன்னால் இயன்ற அளவிற்கு உதவி செய்து வருகிறார்.

இந்நிலையில், கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை இறக்குமதி செய்ய நடிகர் சோனு சூட் முடிவு செய்துள்ளார். குறைந்தபட்சம் 4 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை பிரான்சில் இருந்து இறக்குமதி செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். அதில் முதல் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை இன்னும் 12 நாட்களில் இந்தியாவுக்கு வர உள்ளது.

சோனு சூட் பிரான்சில் இருந்து இறக்குமதி செய்யும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நிறுவப்பட உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் சிகிச்சைக்காக வெளிநாட்டில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை இறக்குமதி செய்யும் நடிகர் சோனு சூட்டிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Next Story