இஸ்ரேலில் உயிரிழந்த இந்திய செவிலியரின் உடல் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது


இஸ்ரேலில் உயிரிழந்த இந்திய செவிலியரின் உடல் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது
x
தினத்தந்தி 15 May 2021 4:50 AM GMT (Updated: 15 May 2021 4:50 AM GMT)

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இந்திய செவிலியரின் உடல் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது.

புதுடெல்லி,

கேரளாவின் இடுக்கி மாவட்டம், கீரித்தோடு காஞ்சிரம் தானம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் என்பவருடைய மனைவி சவுமியா(32). செவிலியரான இவர் இஸ்ரேல் நாட்டில் உள்ள காசாநகர் அருகே ஒரு வீட்டில் தங்கி இருந்து கவனிப்பாளராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளான். 

இந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதி தனது கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசியபோது, தான் வேலை செய்து வரும் வீட்டின் அருகே குண்டு வீசி தாக்குதல் நடத்துவதாக தெரிவித்தார். அப்போது திடீரென பயங்கர சத்தம் கேட்டதோடு செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

இஸ்ரேல் மீது பாலஸ்தீனைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் நடத்திய ராக்கெட் தாக்குதலில், சவுமியா சந்தோஷ் உயிரிழந்த செய்தி பின்னர் தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார். அத்துடன் சவுமியாவின் உடலை கேரளாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி வெளியுறவுத்துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இது குறித்து தகவலறிந்த மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளீதரன், சவுமியாவின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு பேசி தனது இரங்கலை தெரிவித்ததோடு, சவுமியாவின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார். 

இதனையடுத்து இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு சவுமியாவின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்டது. அதன்படி இன்று காலை சவுமியாவின் உடல் விமானம் மூலமாக டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவருக்கு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சவுமியாவின் உடல் அவரது சொந்த ஊருக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

Next Story