கங்கை ஆற்றில் ஒரே வாரத்தில் மிதந்த 100க்கும் மேற்பட்ட உடல்கள்: மாநிலங்களுக்கு நோட்டீஸ்


கங்கை ஆற்றில் ஒரே வாரத்தில் மிதந்த 100க்கும் மேற்பட்ட உடல்கள்:  மாநிலங்களுக்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 15 May 2021 12:08 PM GMT (Updated: 15 May 2021 12:08 PM GMT)

கங்கை ஆற்றில் ஒரே வாரத்தில் 100க்கும் மேற்பட்ட உடல்கள் மிதந்து வந்த சம்பவத்தில் தொடர்புடைய மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

பீகார் மற்றும் உத்தர பிரதேசம் மாநிலங்களில் ஒரே வாரத்தில் 100க்கும் மேற்பட்ட உடல்கள் கங்கை ஆற்றில் மிதந்து வந்து அதிர்ச்சி ஏற்படுத்தியது.  கங்கை ஆற்றை தூய்மைப்படுத்தும், தூய்மை கங்கா திட்ட நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.

உத்தர பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் நராஹி பகுதியில் உஜியார், குல்ஹாடியா மற்றும் பராவ்லி ஆகிய இடங்களில் 52 உடல்கள் மிதந்து வந்துள்ளன.  இதேபோன்று பீகாரின் பக்சார் மாவட்டத்தில் 71 உடல்கள் இதுவரை மீட்டெடுக்கப்பட்டு உள்ளன.

இதனை தொடர்ந்து, மத்திய ஜலசக்தி அமைச்சகம், உத்தர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், நாள்தோறும் கங்கை ஆற்றின் நீரை சார்ந்திருக்க கூடிய மக்களுக்கு, இதுபோன்று தூக்கியெறியப்படும் உடல்களால் கடுமையாக பாதிப்பு ஏற்படுத்த கூடும்.  இவை கொரோனா நோயாளிகளின் உடல்கள் இல்லையென்றாலும், இந்த நடைமுறைகள் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் அவமானம்.

அதனுடன், இறந்தவர்களானாலும் அவர்களுக்கான மனித உரிமைகளை மீறும் செயலாகும் என தெரிவித்து உள்ளது.  இதுபற்றி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையை 4 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்து உள்ளது.


Next Story