'மாட்டுச்சாணம்,சிறுநீர் கொரோனாவை குணப்படுத்தாது’ என பதிவிட்ட பத்திரிக்கையாளர் கைது


மாட்டுச்சாணம்,சிறுநீர் கொரோனாவை குணப்படுத்தாது’ என பதிவிட்ட பத்திரிக்கையாளர் கைது
x
தினத்தந்தி 19 May 2021 4:27 AM GMT (Updated: 19 May 2021 5:01 AM GMT)

மணிப்பூர் மாநில பாஜக தலைவர் திக்கேந்திர சிங் கடந்த வாரம் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தார்.

இம்பால்,

மணிப்பூர் மாநில பாஜக தலைவராக செயல்பட்டு வந்தவர் திக்கேந்திர சிங். கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திக்கேந்திர சிங் கடந்த 13-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பிற்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

இதற்கிடையில், கொரோனா பாதிப்பால் பாஜக தலைவர் திக்கேந்திர சிங் உயிரிழந்தது தொடர்பாக அம்மாநிலம் இம்பாலாவை சேர்ந்த கிஷோர் சந்திர வாங்கேம் என்ற பத்திரிக்கையாளரும், எரேந்திரோ லிசோம்பம் என்ற சமூக செயற்பாட்டாளரும் தங்கள் சமூகவலைதளமான பேஸ்புக் பக்கங்களில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தனர்.

பத்திரிக்கையாளர் கிஷோர் சந்திர வாங்கேம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், மாட்டுச்சாணமும், மாட்டுச்சிறுநீரும் கொரோனாவுக்கு எதிராக வேலை செய்யாது. ஆதாரமற்ற வாதங்கள். நாளை நான் மீன் சாப்பிடப்போகிறேன். ஆழ்ந்த இரங்கல் (ஆர்.ஐ.பி. RIP)’ என பதிவிட்டிருந்தார்.

சமூக செயற்பாட்டாளரான எரோந்திரோ லிசோம்பம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கொரோனா வைரசை குணப்படுத்துவதற்கான மருந்து மாட்டுச்சாணம் மற்றும் மாட்டுச்சிறுநீர் அல்ல. கொரோனாவை குணப்படுத்துவதற்கான மருந்து அறிவியல் மற்றும் பொதுஅறிவு. பேராசிரியரே ஆழ்ந்த இரங்கல் ‘(ஆர்.ஐ.பி. RIP)’ என பதிவிட்டிருந்தார். 

பத்திரிக்கையாளர் கிஷோர் சந்திர வாங்கேம் மற்றும் சமூக செயற்பாட்டாளர் எரேந்திரோ லிசோம்பம் ஆகிய இருவரின் சமூகவலைதள பதிவுகள் பாஜக மாநில தலைவர் திக்கேந்திர சிங் கொரோனாவால் உயிரிழந்ததை விமர்சிக்கும் வகையில் இருந்ததாக மணீப்பூர் மாநில பாஜக சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.



அந்த புகாரையடுத்து கிஷோர் சந்திர வாங்கோம் மற்றும் எரேந்திரோ லிசோம்பம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக தேசிய பாதுகாப்பு சட்டம் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதே பதியப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மாட்டுச்சாணமும், சிறுநீரும் கொரோனாவை குணப்படுத்தாது என்று சமூகவலைதளத்தில் பதிவிட்ட பத்திரிக்கையாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ள சம்பவத்திற்கு பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Next Story