ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று நடக்கிறது கொரோனா மருந்து, தடுப்பூசி, உபகரணங்களுக்கு வரிவிலக்கா?


ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று நடக்கிறது கொரோனா மருந்து, தடுப்பூசி, உபகரணங்களுக்கு வரிவிலக்கா?
x
தினத்தந்தி 28 May 2021 1:57 AM GMT (Updated: 28 May 2021 1:57 AM GMT)

8 மாதங்களுக்கு பின்னர் முதல்முறையாக இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடக்கிறது. இதில் கொரோனா மருந்துகள், தடுப்பூசி, உபகரணங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதுடெல்லி, 

ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு சேவை வரி கவுன்சில் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும். ஆனால் நாடு கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து மீள்வதற்காக போராடி வருவதால் 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்தக் கூட்டம் நடத்தப்படவில்லை.

8 மாதங்களுக்கு பின்னர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடக்கிறது. இது ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 43-வது கூட்டம் ஆகும்.

டெல்லியில் இருந்தவாறு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் காணொலிக்காட்சி வழியாக இந்த கூட்டத்தை நடத்துகிறார். இதில் நிதித்துறை ராஜாங்க மந்திரி அனுராக் தாக்குர், மாநில நிதிமந்திரிகள், மூத்த அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். தமிழகத்தின் சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதல்முறையாக இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

பா.ஜ,க. அல்லாத, ஒருமித்த கருத்துடைய கட்சிகளால் ஆளப்படுகிற 8 மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஷ்கார், தமிழ்நாடு, மராட்டியம், ஜார்கண்ட், கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவற்றின் நிதி மந்திரிகள், கொரோனா வைரஸ் பெருந்தொற்று கால அத்தியாவசியப் பொருட்களான மருந்துகள், தடுப்பூசி, மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றின் மீது விரிவிலக்கு வழங்கக்கோரும் ஒரு கூட்டு உத்தியை வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விவகாரம், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும். அப்போது இந்த பொருட்களுக்கு வரிவிலக்கு வழங்குவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம்.

இது தொடர்பாக ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து மத்திய, மாநில அரசுகளின் வரி அதிகாரிகளைக் கொண்ட ‘பிட்மென்ட் கமிட்டி’ (பொருத்த குழு) தனது பரிந்துரையை ஜி.எஸ்.டி. கவுன்சிலிடம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசிகள், மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் போன்றவற்றுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க இயலாது என்று ஏற்கனவே நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிராகரித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “இப்படி வரி விலக்கு வழங்கினால், பொதுமக்களுக்கு அத்தகைய விலக்கால் உயிர்காக்கும் பொட்களின் விலை உயர்ந்து விடும், உற்பத்தியாளர்கள் உள்ளீடுகளுக்கு செலுத்தும் வரிகளை ஈடு செய்ய முடியாது. உள்ளீட்டு வரியை நுகர்வோரே செலுத்தும் நிலை உருவாகும். இதனால் அவற்றின் விலை உயரும்” என குறிப்பிட்டது நினைவு கூரத்தக்கது.

தற்போது உள்நாட்டு பொருட்கள் மற்றும் தடுப்பூசிகளின் வணிக ரீதியிலான இறக்குமதி ஆகியவற்றுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது, கொரோனா மருந்துகளுக்கும், ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கும் 12 சதவீத வரி விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.எஸ்.டி. அமல்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய இழப்பை மத்திய அரசு ஈடு செய்யும் என்ற வாக்குறுதியின்படி, தற்போது மதிப்பிடப்பட்டுள்ள ரூ.2.69 லட்சம் கோடி இழப்பீட்டை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டியது குறித்து விவாதிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. இது இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Next Story