நோய் எதிர்ப்பு சக்தி உற்பத்தியில் கோவேக்சினை மிஞ்சிய கோவிஷீல்டு தடுப்பூசி - ஆய்வில் கண்டுபிடிப்பு


நோய் எதிர்ப்பு சக்தி உற்பத்தியில் கோவேக்சினை மிஞ்சிய கோவிஷீல்டு தடுப்பூசி - ஆய்வில் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 8 Jun 2021 2:09 AM GMT (Updated: 8 Jun 2021 4:17 AM GMT)

கோவேக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசி அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கோவேக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் செயல்திறன் 81 சதவீதம் ஆகும்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனேகா கூட்டு கண்டுபிடிப்பான கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் செயல்திறன் 70 சதவீதம்.

இந்தநிலையில், எந்த தடுப்பூசியால், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் பொருள் (ஆன்டிபாடி) அதிகமாக உற்பத்தி ஆகிறது என்பது பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள விஜய்ரத்னா டயாபடீஸ் சென்டர், கொல்கத்தாவில் உள்ள ஜி.டி. ஆஸ்பத்திரி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.

13 மாநிலங்களின் 22 நகரங்களை சேர்ந்த 515 சுகாதார பணியாளர்களை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களில் 210 போ் பெண்கள். 425 பேர் கோவிஷீல்டு தடுப்பூசி 2 தவணையும், 90 பேர் கோவேக்சின் தடுப்பூசி 2 தவணையும் போட்டுக்கொண்டனர்.

நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை கணக்கிட அவர்களது ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், கோவிஷீல்டு போட்டுக்கொண்டவர்களில் நோய் எதிர்ப்பு சக்தி அளவு, மி.லி.க்கு 127 ஏ.யு. என்ற அளவிலும், கோவேக்சின் போட்டுக்கொண்டவர்களில் நோய் எதிர்ப்பு சக்தி அளவு, மி.லி.க்கு 53 ஏ.யு. என்ற அளவிலும் இருந்தன.

மேலும், நோய் எதிர்ப்பு சக்தி உற்பத்தி விகிதம் கோவிஷீல்டு தடுப்பூசியில் 98.1 சதவீதமும், கோவேக்சின் தடுப்பூசியில் 80 சதவீதமும் காணப்பட்டது. 60 வயதை தாண்டியவர்களை விட 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த விகிதம் அதிகமாக இருந்தது. டைப் 2 நீரிழிவு நோய் இருப்பவர்களிடம் குறைவாக இருந்தது.

முதல் தவணை தடுப்பூசி போடுவதற்கு 6 வாரங்களுக்கு முன்பு கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மற்றவர்களை விட 100 சதவீத நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருந்தது.

Next Story