இன்று நடக்க இருந்த மைசூரு மாநகராட்சி மேயர் தேர்தல் நடத்த தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


இன்று நடக்க இருந்த மைசூரு மாநகராட்சி மேயர் தேர்தல் நடத்த தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 10 Jun 2021 11:27 PM GMT (Updated: 10 Jun 2021 11:27 PM GMT)

இன்று நடக்க இருந்த மைசூரு மாநகராட்சி மேயர் தேர்தலை நடத்த தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேயர் பதவி ரத்து
மைசூரு மாநகராட்சிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மேயர் தேர்தல் நடந்தது. அப்போது பயங்கர நெருக்கடிக்கும், இழுபறிக்கும் மத்தியில் காங்கிரஸ் கட்சியும், ஜனதா தளம்(எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து மைசூரு மாநகராட்சியை கைப்பற்றியது. இதில் இட ஒதுக்கீட்டின்படி மேயர் பதவி பெண் கவுன்சிலருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதால், மேயர் பதவியை ஜனதா தளம்(எஸ்) கட்சியைச் சேர்ந்த ருக்மணி மாதேகவுடா கைப்பற்றினார். துணை மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் கவுன்சிலர் தேர்தலின்போது ருக்மணி மாதேகவுடா பிரமாண பத்திரத்தில் பொய்யான தகவல்களை தெரிவித்து போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்று கூறப்படுகிறது. இதனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட ரஜினி அண்ணய்யா என்பவர் மைசூரு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மைசூரு கோர்ட்டு ருக்மணி மாதேகவுடாவின் கவுன்சிலர் பதவியையும், மேயர் பதவியையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

இன்று மேயர் தேர்தல் நடக்கிறது
இதை எதிர்த்து ருக்மணி மாதேகவுடா, கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு மைசூரு கோர்ட்டின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இதனால் ருக்மணி மாதேகவுடா தனது மேயர் பதவியை இழந்தார். இதையடுத்து மைசூரு மாநகராட்சி மேயர் தேர்தல் வருகிற 11-ந் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று(வெள்ளிக்கிழமை) மைசூரு மாநகராட்சி மேயர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக மைசூரு மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மைசூரு மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தல் நாளை(இன்று) நடைபெற உள்ளது. மைசூரு மாநகராட்சி கவுன்சில் அரங்கில் வைத்து ஓட்டுப்பதிவு நடக்கிறது. காலை 11 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மைசூரு மண்டல 
கமிஷனரும், மாநகராட்சி கமிஷனராகிய நானும் சேர்ந்து இந்த தேர்தலை நடத்துகிறோம்.இந்த முறை மேயராக தேர்ந்தெடுக்கப்படுபவர் 8 மாதங்கள் மட்டுமே அந்த பதவியில் இருக்க முடியும். அதன்பிறகு மைசூரு மாநகராட்சிக்கு பொது தேர்தல் நடத்தப்படும். வேட்புமனு தாக்கல் காலை 8 மணிக்கு தொடங்கும். அதன்பிறகு தான் மேயர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும். மைசூரு மாநகராட்சியில் மொத்தம் 65 கவுன்சிலர்கள் உள்ளனர். அதில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் 21 பேரும், ஜனதா தளம்(எஸ்) கவுன்சிலர்கள் 22 பேரும், பா.ஜனதா கவுன்சிலர்கள் 25 பேரும், பகுஜன் சமாஜ் கட்சி கவுன்சிலர் ஒருவரும், எஸ்.டி.பி.ஐ. கட்சி கவுன்சிலர் 3 பேரும், சுயேச்சை கவுன்சிலர்கள் 2 பேரும் உள்ளனர்.இதில் ருக்மணி மாதேகவுடாவின் கவுன்சிலர் பதவி ரத்து செய்யப்பட்டு இருப்பதால் அவரால் வாக்களிக்க இயலாது. மற்ற 64 பேரும் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் ஆவார்கள்.

தேர்தலுக்கு தடை
இதுதவிர ஒரு எம்.பி., 4 எம்.எல்.ஏ.க்கள், 4 எம்.எல்.சி.க்கள் ஆகியோரும் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் ஆவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில், பதவி நீக்கம் ெசய்யப்பட்ட மாநகராட்சி மேயர் ருக்மிணி மாதேகவுடா, தனது பதவி நீக்கத்தை எதிர்த்தும், தேர்தல் நடத்த தடை விதிக்கும்படியும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மைசூரு மாநகராட்சி தேர்தலை நடத்த தடை விதித்துள்ளது. இன்று நடக்க இருந்த தேர்தல் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story