டெல்லியில் ஊரடங்கு தளர்வு: அனைத்து கடைகள், உணவு விடுதிகள் திறக்க இன்று முதல் அனுமதி


டெல்லியில் ஊரடங்கு தளர்வு:  அனைத்து கடைகள், உணவு விடுதிகள் திறக்க இன்று முதல் அனுமதி
x
தினத்தந்தி 14 Jun 2021 1:33 AM GMT (Updated: 14 Jun 2021 1:33 AM GMT)

டெல்லியில் ஊரடங்கு தளர்வு அறிவிப்பினை முன்னிட்டு அனைத்து கடைகள், உணவு விடுதிகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.

புதுடெல்லி,

நாட்டின் தலைநகர் டெல்லியில் கடந்த 3 மாதங்களில் ஒப்பிடும்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது சமீப நாட்களாக குறைந்துள்ளது.  கடந்த சனிக்கிழமையில் 300க்கும் குறைவான புதிய பாதிப்புகளே பதிவாகின.

இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் ஊரடங்கு தளர்வுக்கான அறிவிப்புகளை நேற்று வெளியிட்டார்.  இதன்படி, இந்த உத்தரவு இன்று காலை முதல் அமலுக்கு வருகிறது.  இதில் சில செயல்பாடுகளுக்கு தடை விதித்தும், சில செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்ட முறையிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளன.

இந்த அறிவிப்பின்படி, அனைத்து சந்தைகளிலும் உள்ள அனைத்து கடைகளும் அடுத்தடுத்து திறக்கப்படலாம்.  வணிக வளாக கடைகளையும் திறக்க அனுமதிக்கப்படுகிறது.  ஆனால், சந்தைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரையே திறக்க அனுமதிக்கப்படும்.

முதற்கட்ட தளர்வில், கட்டுமானம் மற்றும் தொழிற்சாலை பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

சலூன் கடைகள் திறக்கவும், மெட்ரோ மற்றும் பேருந்துகளில் 50 சதவீத பயணிகளுடன் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.  எனினும், ஸ்பாக்கள் மூடப்பட்டு இருக்கும்.  அரசு உத்தரவின்படி, ஆட்டோ, இ-ரிக்ஷா, டாக்சி ஆகியவற்றில் 2 பேருக்கு கூடுதலாக பயணிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும், பள்ளி, கல்லூரி, கல்வி மற்றும் பயிற்சி மையம் ஆகியவை தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.  சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார, மத திருவிழாக்கள் ஆகியவற்றுக்கு தடை தொடரும்.

நீச்சல் குளங்கள், விளையாட்டு வளாகங்கள், திரையரங்குகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்டவையும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.

ஊரடங்கு தளர்வில், ஓட்டல்களில் அல்லது திருமண மண்டபங்கள் போன்ற பொது இடங்களில் நடத்த அனுமதி இல்லை.  வீட்டில் 20 பேருக்கு கூடுதலாக இல்லாமல் திருமண நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ளலாம்.  இதே எண்ணிக்கையில் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.


Next Story