கொரோனாவால் இறந்த பி.பி.எல். ரேஷன் அட்டைதாரர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்: எடியூரப்பா


கொரோனாவால் இறந்த பி.பி.எல். ரேஷன் அட்டைதாரர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்: எடியூரப்பா
x
தினத்தந்தி 14 Jun 2021 10:06 PM GMT (Updated: 14 Jun 2021 10:06 PM GMT)

கர்நாடகத்தில் கொரோனாவால் இறந்த பி.பி.எல். ரேஷன் அட்டைதாரர் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு(2020) மார்ச் மாதம் முதல் பரவ ஆரம்பித்தது.

நாட்டிலேயேமுதல் பலி
இதன்காரணமாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் ஊரடங்கை பிறப்பித்தார். அதேபோல் கர்நாடகத்திலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த நிலையில் நாட்டிலேயே கொரோனாவுக்கு கர்நாடகத்தைச் சேர்ந்தவர் தான் முதலாவதாக பலியானார். கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தைச் சேர்ந்த அந்த முதியவர் உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார்.அதன்பின்னர் அவரது சளி மாதிரி, முடி ஆகியவற்றை எடுத்து பரிசோதித்து பார்த்தபோது, அவர் கொரோனா தாக்குதலால் பலியானது உறுதி செய்யப்பட்டது. அதன்பின்னர் கர்நாடகத்தில் கொரோனா பரவலும், பலி எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வந்தது.

தளர்வுகள் அமல்
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவின் முதலாவது அலையில் சிக்கி பலர் பலியான நிலையில், தற்போது 2-வது அலையும் தனது கோரப்பிடியை இறுக்கி உள்ளது. இதன்காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கர்நாடகத்தில் தினசரி கொரோனா பரவல் எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கு மேலும், பலி எண்ணிக்கை 500-ஐ தாண்டியும் பதிவானது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தியது.நேற்றுடன் மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகம் உள்ள 11 மாவட்டங்களைத் தவிர பெங்களூரு உள்பட மற்ற மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. நேற்று முன்தினத்தின் நிலவரப்படி கர்நாடகத்தில் மொத்தம் 27 லட்சத்து 65 ஆயிரத்து 134 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 25 லட்சத்து 51 ஆயிரத்து 365 பேர் குணமடைந்து இருந்தனர்.

இதுவரை32,913 பேர் பலி
வைரஸ் தொற்றுக்கு இதுவரை 32,913 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் பலர் ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதில் குடும்பத்தை காப்பாற்றும் தலைவர்களே பலியாகியுள்ளது தான் பெரிய சோகம். இதனால் அந்த குடும்பங்கள் வாழ்க்கையை நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் கர்நாடகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை மந்திரி எஸ்.டி.சோமசேகர் தொடங்கி வைத்தார். அதாவது அவர் தனது தொகுதியான பெங்களூருவில் உள்ள யஷ்வந்தபுரம் தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு மட்டும் இந்த திட்டத்தை தொடங்கினார்.

தலா ரூ.1 லட்சம் நிவாரணம்
அதேபோல் சுகாதார துறை மந்திரி சுதாகரும், தனது தொகுதியான சிக்பள்ளாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட மக்களில் கொரோனாவால் இறப்பவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை தொடங்கினார். இவர்கள் இருவரும் தங்களது சொந்த நிதியில் இருந்து இந்த திட்டத்தை தொடங்கினர்.இந்த நிலையில் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார். இது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோருக்கான (பி.பி.எல்.) ரேஷன் அட்டையை வைத்து இருக்கும் குடும்பங்களுக்கு மட்டும் பொருந்தும் என்று அவர் கூறியுள்ளார்.

ஒருவருக்கு மட்டுமே...

இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஏழை குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.சில குடும்பங்கள் தெருவுக்கு வந்துவிட்டன. அதனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்த பி.பி.எல். ரேஷன் கார்டுதாரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். இது ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பொருந்தும். இந்த திட்டத்தின்படி நிவாரணம் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு ஓரிரு நாளில் வெளியிடும். மேலும் இந்த திட்டம் கர்நாடகத்தில் கொரோனா பரவல் தொடங்கியது முதல் இதுவரையில் வைரஸ் தொற்றால் பலியான பி.பி.எல். ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொருந்தும்.

30 ஆயிரம் குடும்பங்கள்
இதனால் அரசுக்கு ரூ.300 கோடி நிதிச்சுமை ஏற்படும். இந்த திட்டம் மூலம் சுமார் 30 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும். மாநில அரசின் நிதி நிலை நன்றாக தான் உள்ளது. அதற்கு நான் அறிவித்துள்ள இந்த திட்டமே சாட்சி. மண்டியா பால் 
கூட்டமைப்பில் பாலில் நீர் கலப்படம் செய்து முறைகேடு செய்யப்பட்டுள்ளது. அதன்காரணமாக அந்த பால் கூட்டமைப்பு இயக்குனர் மாற்றப்பட்டுள்ளார். தவறு செய்த 5 அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த 
முறைகேடு குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சி.ஐ.டி. மூலம் விசாரணை நடத்தப்படும்.

சாலை விபத்தில் உயிரிழந்த நடிகர் சஞ்சாரி விஜய், மறைவுக்கு நான் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இழப்பை தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தினர், ரசிகர்களுக்கு இறைவன் வழங்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story