'டுவிட்டர் இந்தியா' நிறுவன இயக்குனரிடம் விசாரணை நடத்திய போலீசார்


டுவிட்டர் இந்தியா நிறுவன இயக்குனரிடம் விசாரணை நடத்திய போலீசார்
x
தினத்தந்தி 17 Jun 2021 4:42 AM GMT (Updated: 2021-06-17T10:12:42+05:30)

டூல் கிட் விவகாரத்தில் 'டுவிட்டர் இந்தியா’ நிறுவனத்தின் இயக்குனரிடம் டெல்லி போலீசார் கடந்த மாதம் 31-ம் தேதி டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தியது தெரியவந்துள்ளது.

புதுடெல்லி,

போராட்டங்கள் நடத்தும் போது, அந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் செய்ய வேண்டியவை என்னென்ன என்பதை விளக்க பயன்படுத்தும் ஒருவகை செயல்திட்ட்டமே ‘டூல் கிட்’. எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் போராட்ட செயல்திட்ட ஆவணம் ஆகும்.

பொதுவாக எந்த ஒரு போராட்டத்தின் போதும் டூல் கிட் மூலம் போராட்டம் செயல்திட்டம் சமூகவலைதளத்தில் பரப்பப்பட்டு வருகிறது. மேலும், இந்த டூல் கிட் மூலம் குறிப்பிட்ட கட்சி, தனிநபர்களை குறிவைத்து டுவிட்டரில் டிரெண்ட் செய்யும் நடைமுறைகளும் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையில், பாஜக செய்தித்தொடர்பாளர்களில் ஒருவரான சம்பித் பாத்ரா கடந்த மாதம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில், கொரோனாவை கையாள்வதில் மோடி அரசு தோல்வியடைந்துவிட்டதாக தெரிவிக்கும் வகையிலும், பாஜக அரசை விமர்சிக்கும் வகையிலும் டூல் கிட் மூலம் செயல்திட்ட்டம் ஒன்றை டுவிட்டர் மூலம் காங்கிரஸ் கட்சி பரப்பி வருவதாக தெரிவித்தார்.

மேலும், கொரோனா வைரசை கையாளுவதில் இந்தியாவை வெளிநாட்டு ஊடகங்கள் தொடர்ந்து விமர்சிக்க இந்த டூல் கிட் மூலம் செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், அந்த பதிவுடன் ஒரு ஆவணத்தையும் இணைத்தார். ஆனால், இது தவறான தகவல் என காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது. சம்பித் பாத்ரா மீது டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பாத்ரா பதிவிட்டிருந்த அந்த டுவிட்டர் பதிவை ’(திருத்தி அமைக்கப்பட்ட) கையாளப்பட்ட ஊடகம் (manipulated media)’ என்று டுவிட்டர் நிறுவனம் அறிவித்தது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது.
 
இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் டூல் கிட் விவகாரம் குறித்து விசாரணையை தொடங்கினர். டூல் கிட் தொடர்பான அனைத்து தகவல்களையும் தங்களுக்கு பகிரும் படி டுவிட்டர் இந்தியா நிறுவன இயக்குனர் மனீஷ் மகேஷ்வரிக்கு டெல்லி போலீசார் கடந்த மாதம் 21-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு அன்றைய தினமே இ-மெயில் மூலம் மனீஷ் விளக்கம் அளித்தார்.

இந்த இ-மெயில் விளக்கத்தை திருப்திகரமாக இல்லாததால் 23-ம் தேதி இரண்டாவது நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் இந்த விசாரணையில் இணையுமாறு டெல்லி போலீசார் கேட்டுக்கொண்டனர்.

அதற்க்கு 24-ம் தேதி மனீஷ் மீண்டும் இ-மெயில் மூலம் பதில் அளித்தார். அந்த பதிலும் திருப்தி அளிக்காததால் 25-ம் தேதி இரவு 7 மணிக்கு விசாரணையில் இணையும்படி 3-வது முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அப்போதும், அவர் விசாரணையில் இணையவில்லை. 4-வது முறையாக கடந்த 27-ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த முறையும் மனீஷிடம் இருந்து முறையான விளக்கம் வரவில்லை.

இதனை தொடர்ந்து டெல்லி சிறப்பு பிரிவு போலீசாரின் மூத்த அதிகாரிகள் கடந்த 31-ம் தேதி கர்நாடகா மாநிலம் பெங்களூரு சென்றனர். பெங்களூரில் உள்ள டுவிட்டர் இந்தியா நிறுவன இயக்குனர் மனீஷ் மகேஷ்வரியின் வீட்டிற்கே டெல்லி போலீசார் சென்றுள்ளனர். அங்கு அவரிடம் டூல் கிட் தொடர்பாக விசாரணை நடைபெற்றுள்ளது.

இந்த விசாரணையின் போது டுவிட்டர் இந்தியாவின் நிறுவன இயக்குனராக செயல்பட்டு வரும் போதும் டுவிட்டர் இந்தியா நிறுவனத்தில் தனக்கு கீழ் பணியாற்றும் பிற அதிகாரிகள் மற்றும் நிறுவனத்தின் கட்டமைப்பு முறைகள் குறித்து முழுமையாக தெரியாது என போலீசாரிடம் மனீஷ் தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி போலீசாரின் விசாரணையின் போது டுவிட்டர் இந்தியா நிறுவனம் தனது தாய் நிறுவனமான அமெரிக்காவில் உள்ள டுவிட்டர் நிறுவனத்துடன் ஏற்படுத்தியுள்ள உறவுமுறை குறித்தும், இந்திய சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகளை தவறாக வழிநடத்த சிக்கலான வலைஅமைப்புகள் மூலம் கார்ப்பரேட்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் தெரியவந்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story