பிரதமருடனான சந்திப்பு மன நிறைவுடன் இருந்தது- மோடியுடனான சந்திப்புக்கு பிறகு மு.க.ஸ்டாலின் பேட்டி


பிரதமருடனான சந்திப்பு மன நிறைவுடன் இருந்தது- மோடியுடனான சந்திப்புக்கு பிறகு மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 17 Jun 2021 12:33 PM GMT (Updated: 17 Jun 2021 12:51 PM GMT)

பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு பிறகு பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

புதுடெல்லி,

தமிழக முதல்-அமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற முன்னர் முதல் முறையாக இன்று டெல்லி சென்றுள்ளார். தனி விமானம் மூலம் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். 

டெல்லி சென்றுள்ள முதல்-அமைச்சர் முக ஸ்டாலினை தி.மு.க எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் நேராக அவர் டெல்லி ஓடிஐஎஸ் பகுதியில் கட்டப்பட்டு வரும் அறிவாலயம் கட்டிடப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டார். அவருக்குக் கட்டிடம் உருவாகும் விதம், அதன் மாதிரிகள் போட்டுக் காட்டப்பட்டு விளக்கப்பட்டது. பின்னர் நேராக டெல்லி வரும் முதல்வர்கள் தங்கும் தமிழக இல்லத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். அங்கு அவரைத் தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்ட தமிழகத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் கார்டு ஆஃப் ஹானர் எனப்படும் டெல்லி பட்டாலியன் போலீசார் அரசு மரியாதை அளித்தனர். அதனை மு.க.ஸ்டாலின் ஏற்று கொண்டார். பின்னர் திமுக எம்.பி.க்கள் வரவேற்றனர்.

அங்கு ஓய்வெடுக்கும் அவரை டெல்லியின் முக்கிய பிரமுகர்கள் சந்தித்தனர். மதிய உணவுக்குப் பின் ஓய்வெடுத்த  அவர், தி.மு.க.வின் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் சரியாக மாலை 4.45 மணிக்குப் புறப்பட்டு பிரதமர் இல்லத்துக்குச் சென்றார்.

அவருடன் அமைச்சர் துரைமுருகன், மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு,   உள்ளிட்டோர் சென்றனர். 

தமிழ்நாட்டின் நலன் சார்ந்த 30க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வலியுறுத்தினார். நீட் தேர்விலிருந்து விலக்கு,  தடுப்பூசி, கருப்பு பூஞ்சை மருந்து, கொரோனா பேரிடர் நிதி, நிலுவை ஜி.எஸ்.டி தொகை குறித்து பிரதமரிடம் முதல்- அமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

 பிரதமர் மோடியுடனான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு 25 நிமிடங்கள் வரை  நடைபெற்றது.

பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு பிறகு பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என  முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மேலும் அவர் கூறும் போது:-

 இந்தியா முழுவதும் தற்போது கொரோனா குறைந்து வருகிறது. பிரதமருடனான சந்திப்பு மன நிறைவுடன் இருந்தது.

 முதல்-அமைச்சரான பிறகு முதல் முறையாக டெல்லி வந்து இருக்கிறேன். தமிழகத்தின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக பிரதமர் உறுதி அளித்து இருக்கிறார்.செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

மேகதாது திட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். சென்னை ஐகோர்ட்டின்  வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அங்கீகரிக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன் நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தேன்.

நாடாளுமன்றம்,சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். புதிய மின்சார சட்ட்த்தை ரத்து செய்ய வலியுறுத்தி உள்ளேன்.இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கே வழங்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளேன்.

எந்த கோரிக்கைகள் தொடர்பாகவும் எந்த நேரத்திலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என பிரதமர் கூறியுள்ளார். 

ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனக் கேட்டுள்ளேன்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தினேன்.

குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கேட்டுக் கொண்டேன்.

கூடுதல் தடுப்பூசிகளை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என கோரியுள்ளேன்.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு சலுகை வழங்க கேட்டுக்கொண்டேன்.

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் எனவும் பிரதமரிடம் வலியுறுத்தினேன்.

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க கேட்டுக்கொண்டேன்.

சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தினேன்.

7 பேர் விடுதலை விவகாரத்தில் நீதிமன்றத்தின் போக்கை பொறுத்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும்.

தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம்.

தலைநகரில் உள்ள தமிழ் ஊடகங்களும் தமிழ்நாட்டு மக்களுக்காக வாதாட வேண்டும்.

கச்ச தீவை மீட்க நடவடிக்கை, சென்னை மெட்ரோ 2ஆம் வழித்தடம் தொடக்கம் ஆகியவற்றையும் கோரினேன்.

கோரிக்கைகளுக்கான காரண காரியங்களை பிரதமரிடம் சொல்லியுள்ளோம்” என கூறினார்.

Next Story