கர்நாடகத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி


கர்நாடகத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி
x

கர்நாடக மாநிலத்தில் ஒரே நாளில் 10.67 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பெங்களூரு,

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற்றது. யோகா தினத்தையொட்டி இந்த தடுப்பூசி போடும் திருவிழா நடந்தது. 18 வயதுக்கு முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக போடும் பணி நடந்தது. கா்நாடகத்தில் தடுப்பூசி திருவிழாவில் 7 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது.

ஆனால் அரசின் இலக்கையும் மீறி ஒரே நாளில் 10 லட்சத்து 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மக்கள் ஆர்வமுடன் வந்து கொரோனா தடுப்பூசியை போட்டு இருந்தார்கள். நேற்று முன்தினம் நடந்த தடுப்பூசி திருவிழாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டு இருந்தார்கள். இதன்மூலம் ஒரே நாளில் அதிகம் தடுப்பூசி போடப்பட்ட மாநிலத்தில் மத்திய பிரதேசம் முதலிடமும், கர்நாடக மாநிலம் 2-வது இடமும் பெற்றது.

பெங்களூருவில் நேற்று முன்தினம் 2 லட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டு இருந்தார்கள். நாட்டில் உள்ள மற்ற நகரங்களை ஒப்பிடுகையில் பெங்களூருவில் அதிகஅளவு மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டு இருப்பதன் மூலம், இந்தூரை அடுத்து பெங்களூருவுக்கு 2-வது இடம் கிடைத்திருந்தது.

பெங்களூருவுக்கு அடுத்தபடியாக கர்நாடகத்தில் பெலகாவி மாவட்டத்தில் 89 ஆயிரத்து 174 பேரும், பல்லாரியில் 66 ஆயிரத்து 960 பேரும், துமகூருவில் 52 ஆயிரத்து 11 பேரும், மண்டியாவில் 51 ஆயிரத்து 882 பேரும் கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டிருந்தனர். கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை ஒரு கோடியே 86 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story