காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15-ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல்


காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15-ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல்
x
தினத்தந்தி 22 Jun 2021 11:26 PM GMT (Updated: 2021-06-23T04:56:42+05:30)

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி 3 ஆண்டுகள் கழித்து 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மாவட்டங்களுக்கு நடைபெற்றது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் 9 மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை.

மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெறவில்லை. நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.

இந்த 9 மாவட்டங்களிலும் வார்டு மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடத்தப்படாமல் இருந்ததால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த மாவட்டங்களில் 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த 6 மாத அவகாசம் கடந்த 4-ந் தேதி நிறைவடைந்ததையொட்டி, மீண்டும் 6 மாத அவகாசம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் புதிய இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய கோடைகால சிறப்பு அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை பரிசீலித்த நீதிபதிகள், ‘உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டியவற்றுக்கான பதவிக்காலம் எப்போது நிறைவடைந்தது’ என்று கேட்டனர்.

அப்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.நரசிம்மா ஆஜராகி, ‘தற்போது தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சராசரியாக தொடர்ந்து இருந்து வருகிறது. சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதாலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மேற்குவங்க தேர்தலுக்கு கொண்டுசெல்லப்பட்டதாலும், எஞ்சியுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்துவதற்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முதல்கட்டமாக பரிசோதிக்க இயலவில்லை. இதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் தேவைப்படுகிறது’ என வாதிட்டார்.

இதற்கு நீதிபதிகள், ‘எல்லா விவகாரங்களிலும் சாக்குபோக்கு சொல்ல, கொரோனா நல்ல ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. 6 மாதம் அவகாசம் அளிக்க முடியாது. எஞ்சியுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3-வது அலைக்குமுன் ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’ என தெரிவித்தனர்.

அப்போது மனுதாரர் சங்கர் சார்பில் ஆஜரானமற்றொரு மூத்த வக்கீல் பி.வில்சன், ‘தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தற்போதுதான் குறையத் தொடங்கியுள்ளது. எனவே, ஆகஸ்டு 31-ந் தேதிக்கு பதிலாக கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்’ என வாதிட்டார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

தமிழ்நாட்டில் நகர்ப்புற மற்றும் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு செப்டம்பர் 15-ந் தேதி வரை அவகாசம் அளிக்கிறோம். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தாமல் இருப்பது அரசமைப்பு சாசனத்துக்கு எதிரானது.

எனவே, செப்டம்பர் 15-ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அட்டவணை, உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story