அயோத்தி ராமர் கோவில் நில மோசடி வழக்கு சி.பி.ஐ., அமலாக்க துறை விசாரணைக்கு உகந்தது: சஞ்சய் ராவத்


அயோத்தி ராமர் கோவில் நில மோசடி வழக்கு சி.பி.ஐ., அமலாக்க துறை விசாரணைக்கு உகந்தது: சஞ்சய் ராவத்
x
தினத்தந்தி 25 Jun 2021 4:43 PM GMT (Updated: 2021-06-25T22:13:54+05:30)

அயோத்தி ராமர் கோவில் நில மோசடி வழக்கு சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரணைக்கு உகந்தது என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.

அதிரடி சோதனை

முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இதுகுறித்து சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

துணை முதல்-மந்திரி அஜித் பவார் மற்றும் சிவசேனா மந்திரி அனில் பரப் ஆகியோருக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தவேண்டும் என பா.ஜனதாவின் மராட்டிய பிரிவு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சி.பி.ஐ. மற்றும் அமலாக்கதுறை அவர்களின் கட்சி தொண்டர்களா? அல்லது கட்சியின் தொழில்நுட்ப துறை உறுப்பினர்களா?. அரசியல் எதிரிகளை குறிவைக்க அவற்றை பயன்படுத்துவதன் மூலம் மத்திய விசாரணை நிறுவனங்களான சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பா.ஜனதா குறைத்து வருகிறது. மத்திய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது சரியில்லை. இது நிறுத்தப்பட வேண்டும்.

ராமர் கோவில் வழக்கு

தேசிய பாதுகாப்பு, தேசிய கருவூலத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் பண மோசடி தொடர்பான வழக்குகளை மத்திய விசாரணை அமைப்புகள் விசாரித்தால் அதை புரிந்துகொள்ள முடியும். ஆனால் இதுபோன்ற வழக்குகளில் அவர்களை ஈடுபடுத்தி விசாரணை அமைப்பின் மரியாதையை பா.ஜனதா ஏன் இழிவுபடுத்துகிறது? அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை நிலம் வாங்கியதில் நடைபெற்ற பண மோசடி சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு பொருத்தமான வழக்காகும். எனவே இதுகுறித்து விசாரணை நடத்தக்கோரி பா.ஜனதாவின் தேசிய நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். சிவசேனா தலைமையிலான மராட்டிய அரசு இந்த ஆண்டு 2 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்கிறது. அடுத்த 3 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்யும். இதன் ஸ்திரத்தன்மையை உடைக்க செய்யப்படும் இதுபோன்ற தந்திரங்கள், முயற்சிகள் ஒருபோதும் பலனளிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

நில மோசடி

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மேற்கொள்வதற்காக ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற பெயரில் அறக்கட்டளை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அறக்கட்டளை மீது சமீபத்தில் ஒரு புகார் கூறப்பட்டது. அதாவது ராமர் கோவிலுக்காக ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.18.5 கோடி மதிப்பில் வாங்கியதாக ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டின. மேலும் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story