மேற்கு வங்காள கவர்னரை உடனடியாக நீக்க வேண்டும்: மம்தா பானர்ஜி


மேற்கு வங்காள கவர்னரை உடனடியாக நீக்க வேண்டும்: மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 28 Jun 2021 7:00 PM GMT (Updated: 2021-06-29T00:30:43+05:30)

மேற்கு வங்காள கவர்னரை உடனடியாக நீக்க வேண்டும் எனமுதல்-மந்திரி மம்தா பானர்ஜி மீண்டும் கூறியுள்ளார்.

கவர்னரின் சுற்றுப்பயணம்
மேற்கு வங்காளத்தில் கவர்னர் ஜெக்தீப் தாங்கருக்கும், முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. கவர்னரை மாற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்.இந்த நிலையில் கவர்னர் தாங்கர் சமீபத்தில் வடக்கு வங்காள பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் எம்.பி., எம்.எல்.ஏ.க்களையும் சந்தித்து பேசியுள்ளார். கவர்னரின் இந்த நடவடிக்கை மம்தா பானர்ஜிக்கு கடும் ஆத்திரத்தை கொடுத்திருக்கிறது. கவர்னர் ஜெக்தீப் தாங்கரை உடனடியாக நீக்க வேண்டும் என மத்திய அரசை அவர் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக மம்தா பானர்ஜி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கவர்னர் ஒரு ஊழல்வாதி
அவர் (கவர்னர்) ஒரு ஊழல்வாதி. 1996-ம் ஆண்டு ஹவாலா ஜெயின் வழக்கில் அவரது பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருக்கிறது. இப்படிப்பட்ட ஒருவரை கவர்னராக தொடர மத்திய அரசு அனுமதிப்பது ஏன்? வடக்கு 
வங்காளத்தில் அவர் ஏன் திடீரென சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்? இதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது. ஏனெனில் அவர் பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.க்களை மட்டுமே சந்தித்து இருக்கிறார்.

வடக்கு வங்காளத்தை பிரிக்க முயற்சி
வடக்கு வங்காளத்தை தனியாக பிரிப்பதற்கான சதி நடப்பதாக நான் உணர்கிறேன். கவர்னர் தாங்கரை நீக்குமாறு மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதிவிட்டேன். அரசியல் சாசனப்படி அவரை சந்திப்பதை தொடர்வேன், அவரிடம் பேசுவேன், அனைத்து விதமான மரியாதையையும் வழங்குவேன். ஆனால் எனது கடிதம் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

Next Story