நாடாளுமன்றத்தில் புதிய மந்திரிகளை அறிமுகம் செய்ய விடாமல் எதிர்க்கட்சிகள் கோஷம் - மோடி கடும் தாக்கு


நாடாளுமன்றத்தில் புதிய மந்திரிகளை அறிமுகம் செய்ய விடாமல் எதிர்க்கட்சிகள் கோஷம் - மோடி கடும் தாக்கு
x
தினத்தந்தி 20 July 2021 2:01 AM GMT (Updated: 20 July 2021 2:01 AM GMT)

நாடாளுமன்றத்தில் புதிய மந்திரிகளை அறிமுகம் செய்ய விடாமல் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில், சமீபத்தில் மத்திய மந்திரிசபையில் சேர்க்கப்பட்ட புதிய மந்திரிகளை இரு அவைகளிலும் அறிமுகம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தார்.

அதன்படி மக்களவையில் அறிமுகம் செய்வதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா பிரதமருக்கு அழைப்பு விடுத்தார். இதற்காக அவர் எழுந்தபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.

புதிய மந்திரிகளை அறிமுகம் செய்ய பிரதமரை அனுமதிக்குமாறு சபாநாயகர், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி, ராணுவ மந்திரி உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதற்கு செவிமடுக்கவில்லை.

இதனால் புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்ததாக கருதுமாறு கூறி, புதிய மந்திரிகளின் பட்டியலை சபாநாயகரிடம் பிரதமர் மோடி அளித்தார்.

மாநிலங்களவையிலும் இதே நிலைதான் நேரிட்டது.

நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக புதிய மந்திரிகளை அறிமுகம் செய்ய விடாமல் தடுத்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.

இது தொடர்பாக மக்களவையில் பேசும்போது அவர் கூறியதாவது:-

பிற்படுத்தப்பட்ட பிரிவினர், கிராமப்புற பின்னணி மற்றும் விவசாய குடும்பத்தில் இருந்து ஏராளமான புதிய மந்திரிகள் வந்திருப்பதை பார்த்து அவை உறுப்பினர்கள் தங்கள் மேஜையை தட்டி உற்சாகத்துடன் அவர்களை வரவேற்பார்கள் என எதிர்பார்த்தேன்.

ஆனால் இத்தகைய பின்னணியை சேர்ந்தவர்கள் மந்திரிகள் ஆனதை சிலர் விரும்பாமல் இருக்கலாம். அதனால்தான் இத்தகைய செயல்கள் அவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

ஏராளமான பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மந்திரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள். அவர்களது பெயர்களை கூட கேட்க விரும்பவில்லை.

பெண்கள், தலித் மற்றும் பழங்குடி பிரிவை சேர்ந்த எம்.பி.க்கள் மந்திரியாகி இருக்கும்போது, அவர்களை அறிமுகம் செய்யவிடாமல் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது என்ன மாதிரியான மனநிலை?

இதுபோன்ற எதிர்மறை மனநிலை முதன் முதலாக சபையில் வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

Next Story