மராட்டியத்தில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு கட்டுப்பாடுகளில் விலக்கு அளிக்க பரிசீலனை: அஜித் பவார்


மராட்டியத்தில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு கட்டுப்பாடுகளில் விலக்கு அளிக்க பரிசீலனை: அஜித் பவார்
x
தினத்தந்தி 24 July 2021 7:26 PM GMT (Updated: 2021-07-25T00:56:28+05:30)

2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்க அரசு பரிசீலித்து வருவதாக துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறியுள்ளார்.

தடுப்பூசி போட்டவர்களுக்கு விலக்கு
மும்பையில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களை மின்சார ரெயில்களில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதேபோல தடுப்பூசி போட்டு கொண்ட கடைக்காரர்களும் கடைகளை வழக்கம் போல திறக்க அனுமதிக்க வேண்டும் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்தநிலையில் 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு வழங்குவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாகவும், இது தொடர்பாக அடுத்த வாரம் முடிவு எடுக்கப்படும் என துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறியுள்ளார்.

கடைகளை திறக்க அனுமதி
இதுகுறித்து அவர் கூறுகையில், " 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு விலக்கு வழங்குவது குறித்து மாநில அரசு சிந்தித்து வருகிறது. இது பொது மக்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும். இதேபோல கடைகளை 7 மணி வரை திறந்து வைக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கைகள் வந்து உள்ளன. கடைகளை நீண்ட நேரம் திறந்து வைக்க அனுமதிப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறோம். இதுகுறித்து இறுதி முடிவை முதல்-மந்திரி எடுப்பார். வரும் திங்கட்கிழமை இதுதொடர்பாக வல்லுநர்களை சந்தித்து பேச உள்ளோம். அதன்பிறகு கடைகளை வாரஇறுதி நாட்களில் திறக்க அனுமதி அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும்" என்றார்.

துணை முதல்-மந்திரி அஜித்பவாரின் இந்த பேச்சை அடுத்து, அடுத்த மாதம் முதல் 1-ந் தேதி முதல் மாநிலத்தில் கட்டுப்பாடுகளில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story