வாரணாசி விமான நிலையத்தில் பூலான் தேவி சிலையை திறக்க விடாமல் பீகார் மந்திரி சிறைவைப்பு


வாரணாசி விமான நிலையத்தில் பூலான் தேவி சிலையை திறக்க விடாமல் பீகார் மந்திரி சிறைவைப்பு
x
தினத்தந்தி 25 July 2021 8:34 PM GMT (Updated: 25 July 2021 8:34 PM GMT)

கொள்ளைக்காரியாக இருந்து அரசியலில் நுழைந்தவர் பூலான் தேவி. அவர் சமாஜ்வாடி கட்சி எம்.பி.யாக இருந்தபோது, சுட்டுக்கொல்லப்பட்டார். அவருக்கு உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ராம்நகர் பகுதியில் சிலை நிறுவப்பட்டது.

விகாஸ்ஷீல் இன்சான் கட்சி தலைவரும், பீகார் மந்திரியுமான முகேஷ் சஹானி, அந்த சிலையை நேற்று திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த சிலையை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் கோஷமிட்டனர். அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால், அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. 

இதற்கிடையே, பூலான் தேவி சிலையை திறப்பதற்காக முகேஷ் சஹானி, டெல்லியில் இருந்து வாரணாசிக்கு விமானத்தில் வந்து சேர்ந்தார். ஆனால், அவரை விமான நிலையத்தை விட்டு வெளியேற விடாமல் அதிகாரிகள் தடுத்து விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், கொல்கத்தா செல்லும் விமானத்தில் அவரை ஏற்றி அனுப்பி வைத்தனர். மேலும், தகவல் அறிந்து வாரணாசி விமான நிலையத்துக்கு விரைந்த கட்சி நிர்வாகிகளின் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். விமான நிலையம் நோக்கி சென்ற அனைத்து வாகனங்களையும் தடுத்து, விசாரணைக்கு பிறகே மேற்கொண்டு செல்ல அனுமதித்தனர்.

Next Story