கொரோனா 3-வது அலை இல்லை என்றால் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பொருளாதாரம் மீளும்: மான்டேக் சிங் அலுவாலியா


கொரோனா 3-வது அலை இல்லை என்றால் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பொருளாதாரம் மீளும்: மான்டேக் சிங் அலுவாலியா
x
தினத்தந்தி 26 July 2021 8:45 PM GMT (Updated: 26 July 2021 8:45 PM GMT)

கொரோனா தொற்று 3-வது அலை இல்லை என்றால், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பொருளாதாரம் மீளத் தொடங்கும் என திட்ட கமிஷன் முன்னாள் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.

‘இந்திய பொருளாதாரத்தைச் செலுத்துதல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் திட்ட கமிஷன் முன்னாள் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா பங்கேற்றார்.அப்போது அவரிடம், குறு, சிறு, நடுத்தர தொழில்துறைக்கு ஆதரவாக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்கப்பட்டது.

பொருளாதாரம் மீளும்
அதற்கு மான்டேக் சிங் அலுவாலியா பதிலளிக்கையில், ‘சிறுதொழில்துறைக்கு இந்த ஆண்டின் எஞ்சியுள்ள காலமும் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் கொரோனா தொற்று 3-வது அலை இல்லை என்றால், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பொருளாதாரம் மீளத் தொடங்கும். மோசமான காலம் முடிவடைந்ததை உணர்ந்த தனியார் துறையினர், முதலீட்டைத் தொடங்குவர். அது மேல்நோக்கிய சுழற்சியை ஏற்படுத்தும்.

‘ரிஸ்க்’ எடுத்திருக்கலாம்
நாம் நிதிப் பற்றாக்குறை விஷயத்தில் இன்னும் கொஞ்சம் ‘ரிஸ்க்’ எடுத்து, பொருளாதார மீட்புத் திட்டங்களுக்கு கூடுதலாக செலவிட்டிருக்கலாம். அது சர்வதேச அளவில் ஒன்றும் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தியிருக்காது. அமெரிக்காவுக்கும்கூட அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் அளவுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இப்படி முன்னணி நாடுகள் எல்லாம் இந்த மாதிரி செல்கையில், யாரும் இந்தியாவை குறைகூற மாட்டார்கள்.

வங்கிகளின் வராக்கடன் பிரச்சினை
ஆனால் அதேநேரம், பொருளாதாரம் பழையநிலைக்குத் திரும்பும்போது, நிதிப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகமாக இருப்பதற்கு நாம் அனுமதிக்க முடியாது.தரமான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதோடு, வங்கிகளின் வராக்கடன் பிரச்சினையையும் கவனிக்க வேண்டும். அதிக வளர்ச்சி காலத்தில் வங்கிகள் ஆர்வம் கொண்டு கூடுதல் கடன்கள் கொடுக்கும்போது, சில வராக்கடன்கள் ஆகிவிடுகின்றன. ஆனால் அதை நாம் கவனித்துச் சரி செய்திருக்க வேண்டும்.’

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story