மக்களவையில் முழுமையான கேள்வி நேரம் நடந்தது; திவால் நிலை குறியீடு மசோதாவும் நிறைவேற்றம்


மக்களவையில் முழுமையான கேள்வி நேரம் நடந்தது; திவால் நிலை குறியீடு மசோதாவும் நிறைவேற்றம்
x
தினத்தந்தி 28 July 2021 11:41 PM GMT (Updated: 2021-07-29T05:11:35+05:30)

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் முதல் முறையாக நேற்று மக்களவையில் முழுமையான கேள்வி நேரம் நடந்தது.

பல்வேறு பிரச்சினைகள்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. ஆனால் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் இந்த தொடரின் முதல் நாளில் இருந்தே இரு அவைகளிலும் அலுவல்கள் முடங்கி வருகின்றன.அந்தவகையில் பெகாசஸ் விவகாரம், வேளாண் சட்டங்கள், விலைவாசி உயர்வு என பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் நாள்தோறும் பலமுறை ஒத்திைவக்கப்பட்டு வருகின்றன.ஆனால் இந்த தொடரில் முதல் முறையாக நேற்று மக்களவையில் முழுமையான கேள்வி நேரம் நடந்தது. இதிலும் எதிர்க்கட்சிகள் புயலை கிளப்பினாலும் அது கேள்வி நேர அலுவல்களை பாதிக்கவில்லை.

10 கேள்விகளுக்கு பதில்
அந்தவகையில் காலையில் அவை கூடியதும் பெகாசஸ், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பிய எதிர்க்கட்சிகள், இது தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளுடன் சபையின் மையப்பகுதியை முற்றுகையிட்டனர்.இதனால் அவையில் குழப்பம் நிலவினாலும், சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தை தொடர்ந்தார். அதன்படி பல்வேறு அமைச்சகங்கள் தொடர்பாக 10 கேள்விகள் மற்றும் அதற்கான துணை கேள்விகளுக்கு அந்தந்த துறை மந்திரிகள் பதிலளித்தனர்.இதனால் மக்களவையில் நேற்றைய கேள்வி நேரம் எந்தவித ஒத்திவைப்பும் இல்லாமல் நடந்தேறியது. 

நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் இது முதல் முறை ஆகும்.எனினும் கேள்வி நேரத்துக்குப்பின் மக்களவை எதிர்க்கட்சியினரின் அமளி புயலில் சிக்கியது. இதனால் பலமுறை சபை ஒத்திவைக்கப்பட்டு, அலுவல்கள் பாதிக்கப்பட்டன.

திவால் நிலை குறியீடு மசோதா
ஆனால் இந்த அமளிக்கு மத்தியிலும் திவால் நிலை குறியீடு (திருத்தம்) மசோதா நிறைவேறியது. கடந்த ஏப்ரல் 4-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள இந்த மசோதாவை கார்பரேட் நலத்துறை மந்திரி ராவ் இந்தர்ஜித் தாக்கல் செய்தார்.கொரோனா பெருந்தொற்றால் முடங்கியுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ெகாண்டு வரப்பட்டுள்ள இந்த மசோதாவில் மேற்படி நிறுவனங்களுக்கான முன் தொகுக்கப்பட்ட பாதிப்பு தீர்க்கும் செயல்முறையை எளிதாக்க திவால் நிலை குறியீட்டில் ஒரு புதிய அத்தியாயத்தை இந்த மசோதா முன்மொழிந்துள்ளது.ஆனால் மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அரங்கேற்றிய அமளியால், மசோதா மீது விவாதம் நடத்த முடியவில்லை.

இதைத்தொடர்ந்து விவாதம் இன்றி இந்த மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் இது முக்கியமானது ஆகும்.

Next Story