கொரோனா பாதிப்பு உயர்வு; கேரளாவில் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்


கொரோனா பாதிப்பு உயர்வு; கேரளாவில் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்
x
தினத்தந்தி 31 July 2021 7:55 AM GMT (Updated: 31 July 2021 7:55 AM GMT)

கேரளாவில் தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு இன்று அமலுக்கு வந்துள்ளது.



திருவனந்தபுரம்,


கேரளாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகின்றன.  நாள்தோறும் 20 ஆயிரத்திற்கும் கூடுதலான தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.  இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33 லட்சத்திற்கும் மேல் சென்றுள்ளது.  இதேபோன்று மொத்த பலி எண்ணிக்கையும் 16 ஆயிரத்திற்கும் கூடுதலாக உயர்ந்துள்ளது.

கேரளாவில் கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் இன்னும் குறையவில்லை.  தொடர்ந்து கொரோனா பாதிப்பு உயர்வடைந்து வருகிறது.  இதனை முன்னிட்டு கேரளாவில் 2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.  இதன்படி, இன்றும், நாளையும் (ஆகஸ்டு 1ந்தேதி) 2 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு, கேரளாவுக்கு மத்திய அரசின் 6 பேர் கொண்ட நிபுணர் குழு பயணம் மேற்கொள்கிறது.  தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் தலைமையிலான 6 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றை கேரளாவுக்கு அனுப்பி வைக்க இருக்கிறோம் என மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

கேரளாவில் தொடர்ந்து அதிக அளவிலான கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.  அதனால், கொரோனா மேலாண்மைக்கான மாநில அரசின் முயற்சிகளுக்கு உதவிடும் வகையில் இந்த குழு செயல்படும் என்றும் அவர் கூறினார்.  இதன்படி, கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு நேற்றிரவு கேரளா வந்தடைந்தது.

இந்த நிலையில், கேரளாவில் 2 நாட்கள் முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.  இந்த நாட்களில் மக்கள் அவசியமின்றி வெளியே வர தடை விதிக்கப்படுவதுடன், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று காய்கறி, பழங்கள் மற்றும் மீன்கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், தேவையின்றி வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


Next Story