மராட்டியத்தில் 25 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்; வணிக வளாகங்களை திறக்க அனுமதி


மராட்டியத்தில் 25 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்; வணிக வளாகங்களை திறக்க அனுமதி
x
தினத்தந்தி 3 Aug 2021 12:58 AM GMT (Updated: 3 Aug 2021 12:58 AM GMT)

மராட்டியத்தில் 25 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. கடைகள் திறந்திருக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டதோடு, வணிக வளாகங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

மராட்டியத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா 2-வது அலை உச்சத்தை தொட்டது.

வலுத்த கோரிக்கை
இதையடுத்து மாநிலத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. அதன்பிறகு பாதிப்பு குறைய, குறைய சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. கடைகளை வார நாட்களில் மட்டும் மாலை 4 மணி 
வரை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஒரே சீராக இருந்து வருகிறது. தினந்தோறும் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு 
வருகின்றனர்.இந்தநிலையில் கடைகளை கூடுதல் நேரம், சனி, ஞாயிற்றுக்கிழமையும் திறக்க அனுமதிக்க வேண்டும், மின்சார ரெயில்களில் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினா் அரசை வலியுறுத்தி வந்தனர். இதனால் மாநிலத்தில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின.

8 மணி வரை கடைகள் திறப்பு
இந்தநிலையில் மராட்டியத்தில் ரத்னகிரி, ராய்காட், கோலாப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தளர்வுகளை அறிவிப்பதில் தாமதமானது.இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று சாங்கிலி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். அப்போது அவர், மாநிலத்தில் பாதிப்பு குறைந்த இடங்களில் கடைகளை இரவு 8 மணி வரை திறந்து வைக்க அரசு உத்தரவை வெளியிடும் என்றார்.மேலும் அவர், "முதல் கட்டமாக மின்சார ரெயில்களில் அனைவருக்கும் அனுமதி அளிப்பது கஷ்டம்" என்றாா்.

வணிக வளாகங்கள் திறப்பு
இந்தநிலையில் மாநில அரசு நேற்று இரவு ஊரடங்கு தளர்வுகள் தொடர்பான விரிவான உத்தரவை பிறப்பித்தது. அதில் தொற்று பாதிப்பு குறைந்த 25 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

அதன் விவரம் வருவமாறு:-

* வணிக வளாகங்கள் உள்பட அனைத்து வகையான கடைகளையும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணி வரையும், சனிக்கிழமை பிற்பகல் 3 மணி வரையும் திறந்து வைக்கலாம். ஞாயிற்றுக்கிழமை வணிகவளாகம், 
அத்தியாவசியம் இல்லாத கடைகளை திறக்க கூடாது.

* உடற்பயிற்சி, நடை மற்றும் ஓட்டப்பயிற்சி, சைக்கிளிங் செல்ல பூங்கா, விளையாட்டு மைதானங்களை திறந்து வைக்கலாம்.

* அரசு, தனியார் நிறுவனங்கள் முழுமையான ஊழியர்களுடன் செயல்படலாம்.

* வீட்டில் இருந்து வேலை செய்ய முடிந்தால் அதையே தொடர வேண்டும்.

* ஜிம், உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்கள், சலூன், அழகுநிலையங்கள், ஸ்பா ஆகியவை செயல்படலாம். ஏ.சி. இல்லாமல் வார நாட்களில் 8 மணி வரையிலும், சனிக்கிழமை பிற்பகல் 3 மணி வரையிலும் செயல்படலாம்.

தியேட்டர், வழிபாட்டு தலங்கள்

* தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ்கள், நாடக அரங்குகள் ஆகியவற்றை திறக்க அனுமதி இல்லை.

* அனைத்து வகையான வழிபாட்டு தலங்களும் மூடியே இருக்கும்.

* ஓட்டல்கள் ஏற்கனவே உள்ளது போல வார நாட்களில் மாலை 4 மணி வரை மட்டுமே 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம்.

* இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வெளியே செல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடரும்.

* மும்பை, மும்பை பெருநகர், தானே மாவட்டங்களிலும் தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகளில் புதிய தளர்வுகளை அறிவிப்பது குறித்து அந்தந்த மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு எடுத்து கொள்ள அதிகாரம் 
வழங்கப்பட்டுள்ளது.

மும்பை, தானே தொற்று குறைந்த 25 மாவட்டங்களின் பட்டியலில் வருவது குறிப்பிடத்தக்கது.இந்த கூடுதல் தளர்வுகள் அனைத்தும் இன்று (செவ்வாய்க்கிழமை) அமலுக்கு வருகிறது.

பால்கர், புனேயில் கட்டுப்பாடுகள் தொடரும்

அதே நேரத்தில் பால்கர், புனே, கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா, ரத்னகிரி, சிந்துதுர்க், சோலாப்பூர், அகமதுநகர், பீட், ராய்காட் ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

எனவே மேற்கண்ட இந்த மாவட்டங்களில் தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என அரசு தெரிவித்து உள்ளது.

Next Story