குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் விதிமுறைகள் வெளியிட்ட பின்னரே குடியுரிமை வழங்கப்படும் - மத்திய அரசு தகவல்


குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் விதிமுறைகள் வெளியிட்ட பின்னரே குடியுரிமை வழங்கப்படும் - மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 5 Aug 2021 1:19 AM GMT (Updated: 5 Aug 2021 1:19 AM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தின் விதிகள் வெளியிட்ட பின்னரே தகுதி வாய்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசு கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டத்துக்கான விதிமுறைகள் இன்னும் வௌியிடப்படவில்லை.

இந்த நிலையில் இந்த சட்டத்தின் கீழ் குடியுரிமை பெறுவதற்காக புதிய விண்ணப்பங்கள் வந்துள்ளதா? என மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் நேற்று எழுத்து மூலம் பதில் அளித்தார்.

அதில் அவர், ‘இந்த சட்டத்துக்கான விதிமுறைகளை வெளியிட மக்களவை மற்றும் மாநிலங்களவையின் துணை சட்ட குழுக்களிடம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந் தேதி வரை கால நீட்டிப்பு கேட்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த விதிமுறைகள் வெளியிட்ட பின்னர்தான் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். அதன்பின்னர்தான் குடியுரிமை வழங்கப்படும்’ என தெரிவித்தார்.

இதைப்போல மற்றொரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் கடந்த ஜூலை 20-ந் தேதி வரை 183 பேர் கைது செய்யப்பட்டதாக கூறினார். எனினும் அதில் யார் மீதும் தேசவிரோத வழக்கு அல்லது பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் வழக்கு எதுவும் பதியவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மத்திய ஆயுதப்படைகள் குறித்த கேள்வி ஒன்றுக்கு அவர் அளித்த பதிலில், கடந்த 6 ஆண்டுகளில் 680 துணை ராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

இதற்கிடையே ரெயில்வே மற்றும் வருவாய்த்துறை போன்ற அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தொடர்பான வழக்குகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்களவையில் சட்டத்துறை மந்திரி கிரண் ரெஜிஜூ நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பான உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில், அனைத்து மட்டங்களிலும் நீதிமன்ற வழக்குகளை திறம்பட கண்காணிக்க ரயில்வே அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளதாகவும், வழக்குகளைக் குறைப்பதன் மூலம் நீதிமன்ற சுமைகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை குறைக்க மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் போன்றவை முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதைப்போல மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்தரி ஜிதேந்திர சிங், மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில், கடந்த 3 ஆண்டுகளில் 96 அரசு உயர் அதிகாரிகள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதாக கூறினார்.

ஊழல் மறறும் பிற குற்ற செயல்கள் தொடர்பாக இந்த வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக கூறிய அவர், இந்த அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story