முல்லை பெரியாரில் புதிய அணை கட்டுவதற்கான ஆயத்த பணிகள் தீவிரம் - ரோஷி அகஸ்டின் தகவல்


முல்லை பெரியாரில் புதிய அணை கட்டுவதற்கான ஆயத்த பணிகள் தீவிரம் - ரோஷி அகஸ்டின் தகவல்
x
தினத்தந்தி 5 Aug 2021 3:59 AM GMT (Updated: 2021-08-05T09:29:29+05:30)

முல்லை பெரியாரில் புதிய அணை கட்டுவதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது என்று கேரள சட்டசபையில் மந்திரி ரோஷி அகஸ்டின் கூறினார்.

திருவனந்தபுரம், 

கேரள சட்டசபையில் நேற்று உறுப்பினர் வாழூர் சோமன் முல்லை பெரியார் அணை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மந்திரி ரோஷி அகஸ்டின் பதில் அளித்து கூறியதாவது:-

முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டுவது உறுதி. அதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது. புதிய அணை கட்டும் பணி தொடங்குவதற்கு முன்னதாக, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற வேண்டியது கட்டாயம் ஆகும்.

மேலும் 2019-ம் ஆண்டில் தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநில முதல்வர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது முல்லை பெரியார் விஷயத்தில் இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்சினைகள் இன்றி சாதகமான முடிவை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து செயலாளர்கள் மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தமிழ் நாட்டில் தேனி, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதிய முல்லை பெரியார் அணை திட்டம் நிறைவேற்றப்படும்.

முல்லைப் பெரியார் அணையின் பாதுகாப்பு தொடர்பாக கேரளா-தமிழ்நாடு இடையே எழுந்துள்ள பிரச்சினை குறித்து ஆராய உச்ச நீதிமன்றம் 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்து உள்ளது.

அணையில் தாழ்வான பகுதியில் வசித்து வரும் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில். தேவையான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story