சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்க கோரிய கடிதத்துக்கு மோடி விரைவில் பதில் தருவார்: நிதிஷ்குமார்


சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்க கோரிய கடிதத்துக்கு மோடி விரைவில் பதில் தருவார்: நிதிஷ்குமார்
x
தினத்தந்தி 19 Aug 2021 4:29 AM GMT (Updated: 19 Aug 2021 4:29 AM GMT)

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விவாதிப்பதற்காக நேரம் ஒதுக்குமாறு அனுப்பப்பட்ட கடிதத்துக்கு பிரதமர் மோடி விரைவில் பதில் தருவார் என பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு இல்லை
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பல்வேறு கட்சிகளும், தலைவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் முக்கியமானவர். ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாது என மத்திய அரசு மறுத்து விட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது, இரு அவைகளிலும் மத்திய அரசு இந்த தகவலை வெளியிட்டது.ஆனால் இந்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நிதிஷ்குமார் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
இதற்கிடையே நிதிஷ்குமாரை சமீபத்தில் சந்தித்த மாநில எதிர்க்கட்சித் தலைவர்கள், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக பிரதமரை வலியுறுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.அத்துடன், பீகாரின் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் டெல்லி சென்று பிரதமருடன் விவாதிப்பதற்காக நேரம் ஒதுக்கித்தர கேட்குமாறும் நிதிஷ்குமாரை அவர்கள் வலியுறுத்தினர். இதில் பீகார் எதிர்க்கட்சித்தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.இதைத்தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விவாதிப்பதற்காக நேரம் ஒதுக்குமாறு பிரதமர் மோடிக்கு, நிதிஷ்குமார் கடிதம் எழுதினார். கடந்த 3-ந்தேதி எழுதப்பட்ட இந்த கடிதம் பெறப்பட்டதாக 13-ந்தேதி பிரதமர் அலுவலகத்தில் இருந்து நிதிஷ்குமாருக்கு ஒப்புதலும் வந்தது.

பதில் வரவில்லை
ஆனாலும் இந்த பிரச்சினையில் நேரம் ஒதுக்குவது குறித்து பிரதமர் மோடியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.இந்த நிலையில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த நிதிஷ்குமாரிடம், மேற்படி கடிதத்துக்கு பதில் ஏதேனும் வந்ததா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு ‘இல்லை’ என பதிலளித்த நிதிஷ்குமார், எனினும் இது குறித்து விரைவில் பதில் வரும் எனவும், அது குறித்த விவரத்தை விரைவில் நீங்கள் (செய்தியாளர்கள்) அறியலாம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story