புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் இன்று முதல் திறப்பு


புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் இன்று முதல் திறப்பு
x
தினத்தந்தி 1 Sep 2021 12:53 AM GMT (Updated: 1 Sep 2021 12:53 AM GMT)

புதுவையில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.

புதுச்சேரி,

புதுவையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. அதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையே அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு முடிவு செய்தது. அதன்படி இன்று (புதன்கிழமை) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி காலை 9 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை அரைநாள் மட்டுமே பள்ளிகள் செயல்படும். அதாவது 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக மட்டுமே முதலில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 9 மற்றும் 11-ம் வகுப்புகள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், 10, 12-ம் வகுப்புகள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் செயல்படும்.

பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் கட்டாயம் முக கவசம் அணியவேண்டும். உடல்வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு கிருமிநாசினி வழங்கப்பட்ட பின்னரே வகுப்பறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும் வகையில் மேஜைகள் போடப்பட்டு இருக்கும்.

கொரோனா அறிகுறிகள் இருந்தால் வகுப்பறைக்குள் ஆசிரியர்கள், மாணவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது உள்பட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையொட்டி ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே பணிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல் கலை அறிவியல் கல்லூரிகளும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று முதல் திறக்கப்படுகின்றன. அங்கும், மாணவர்கள், பேராசிரியர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.இதனையொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பாகவே பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டன.

Next Story