நூற்றாண்டு கண்ட நாயர் ஆஸ்பத்திரியை மேம்படுத்த ரூ.100 கோடி: உத்தவ் தாக்கரே


நூற்றாண்டு கண்ட நாயர் ஆஸ்பத்திரியை மேம்படுத்த ரூ.100 கோடி: உத்தவ் தாக்கரே
x
தினத்தந்தி 4 Sep 2021 8:42 PM GMT (Updated: 4 Sep 2021 8:42 PM GMT)

மும்பை தோபிவாலா மருத்துவ கல்லூரி மற்றும் நாயர் ஆஸ்பத்திரி மேம்பாட்டுக்கு ரூ.100 வழங்குவதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

நூற்றாண்டு விழா
மும்பை மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் தோபிவால தேசிய மருத்துவ கல்லூரி மற்றும் பி.ஒய்.எல். நாயர் ஆஸ்பத்திரி நேற்று நூற்றாண்டு கண்டது. இதையொட்டி நடந்த விழாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மெய்நிகர் முறையில் கலந்து கொண்டார்.

விழாவில் அவர் பேசியதாவது:-
நூற்றாண்டு கண்ட இந்த ஆஸ்பத்திரியில் சேவை மகத்தானது. இந்த ஆஸ்பத்திரியை நவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்த வேண்டும். இதற்காக இந்த மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரிக்காக ரூ.100 கோடியை அரசு வழங்குகிறது.

கொரோனா பற்றிய குறிப்புகள்
கொரோனா பெருந்தொற்று எதிர்பாராதது மற்றும் கணிக்க முடியாததாக உள்ளது. இந்த தொற்று நோய்க்கு எதிராக டாக்டர்கள் சுயநலம் இன்றி பணியாற்றி வருகிறார்கள். இதனால் தான் இன்று கொரோனா கட்டுக்குள் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பானிஸ் புளு தொற்று தாக்கியது. அதன் தாக்கம் மற்றும் அந்த நோயின் தன்மை குறித்து இன்று நம்மிடம் போதிய தரவுகள் இல்லை. இதேபோன்ற நிலையை கொரோனா தொற்று நோயிலும் வந்து விடக்கூடாது. கொரோனா நோய் பற்றிய குறிப்புகளை சேகரித்து அது அடுத்த 50 முதல் 100 ஆண்டுகள் வரை சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டும். அப்படி செய்தால் தான் எதிர்காலத்தில் வேறு ஏதாவது தொற்று நோய் வந்தால் அதனை எளிதாக எதிர்கொள்ள முடியும்.

இவ்வாறு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.

Next Story