மத்திய அரசு நேருவை ஏன் இவ்வளவு வெறுக்கிறது; சிவசேனா கேள்வி


மத்திய அரசு நேருவை ஏன் இவ்வளவு வெறுக்கிறது; சிவசேனா கேள்வி
x
தினத்தந்தி 5 Sep 2021 5:33 PM GMT (Updated: 5 Sep 2021 5:33 PM GMT)

மு.க.ஸ்டாலின் முதிர்ச்சியை காட்டும் அதே நேரம், மத்திய அரசு நேருவை ஏன் இவ்வளவு வெறுக்கிறது என சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.

நேருவின் படம் இல்லை
விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதின் பெயரை சமீபத்தில் மத்திய அரசு மாற்றியது. இதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.சமீபத்தில் சுதந்திர தின விழாவின் 75-வது ஆண்டு கொண்டாட்டம் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. அப்போது மத்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்ட பதாகையில் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் புகைப்படம் இல்லாமல் இருந்தது. 

இது குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் நேற்று வெளிவந்த கட்டுரையில் கூறியிருப்பதாவது:-

கதாநாயகர்
மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எச்.ஆர்.) அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட சுதந்திர தின நிகழ்ச்சி பதாகையில் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு, மவுலானா அபுல் கலாம் ஆசாத் ஆகியோரின் புகைப்படங்கள் விடுபட்டுள்ளது. இது மத்திய அரசின் பழிவாங்கும் செயலாகும்.வரலாற்றை உருவாக்கியதிலும், சுதந்திர போராட்டத்தில் எந்த பங்களிப்பும் இல்லாதவர்கள் சுதந்திர போராட்டத்தின் கதாநாயகர்களில் ஒருவரான நேருவின் படத்தை நீக்கி உள்ளனர். இது ஆரோக்கியமான அரசியல் அல்ல, மத்திய அரசின் குறுகிய மனப்பான்மையை காட்டுகிறது. இது ஒவ்வொரு சுதந்திர போராட்ட வீரரையும் அவமானப்படுத்துவதாகும்.

நேருவால் உருவாக்கப்பட்டவை
சுதந்திரத்திற்கு பிறகு நேருவின் கொள்கைகளில் ஒருவருக்கு வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் சுதந்திர போராட்டத்திற்கு அவர் அளித்த பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது.இந்த அளவு ஜவகர்லால் நேருவை வெறுப்பதற்கு அவர் என்ன செய்தார்?இன்று மத்திய அரசு நிதி நெருக்கடி காரணமாக விற்பனைக்கு தயாராக வைத்திருக்கும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் நேருவால் உருவாக்கப்பட்டவையாகும். பொருளாதார பேரழிவில் இருந்து நாட்டை காக்க வேண்டும் என்பதற்காக தொலைநோக்கு பார்வையுடன் அவர் இவற்றை உருவாக்கினார்.

மு.க.ஸ்டாலின் முதிர்ச்சி
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கள் மாநிலத்தில் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் இலவச புத்தக பையில் முன்னாள் முதல்-அமைச்சர்களான ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்களை நீக்கவேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளார்.இது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது. ஆனால், அதேநேரம் மத்திய அரசு ஏன் நேருவை இவ்வளவு வெறுக்கிறது? நீங்கள் தேசத்தின் இந்த கேள்விக்கு பதிலளிக்க கடமைப்பட்டு இருக்கிறீர்கள்.

அழிக்க முடியாது...
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை மத்திய அரசு விமர்சிப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ராஜீவ் கேல் ரத்னா விருதின் பெயரை மாற்றியதன் மூலம் மத்திய அரசு தனது வெறுப்புணர்வை பிரகடனப்படுத்தி உள்ளது.தேசத்தை கட்டமைத்ததில் நேரு, இந்திரா காந்தியின் பங்களிப்புகளை உங்களால் நிச்சயம் அழிக்க முடியாது. நேருவின் பங்களிப்பை மறுப்பவர்கள் வரலாற்றின் வில்லன்கள் என்று அழைக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறியுள்ளது.

Next Story