மோடி பிறந்த நாளில் தடுப்பூசியில் சாதனை படைக்க பா.ஜ.க. அதிரடி திட்டம்


மோடி பிறந்த நாளில் தடுப்பூசியில் சாதனை படைக்க பா.ஜ.க. அதிரடி திட்டம்
x
தினத்தந்தி 11 Sep 2021 6:05 PM GMT (Updated: 11 Sep 2021 6:05 PM GMT)

வரும் 17-ந் தேதி பிரதமர் மோடி பிறந்த நாளில், கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைக்க பா.ஜ.க.வினர் அதிரடி திட்டம் வகுத்துள்ளனர்.

மோடி பிறந்த நாளில் அதிரடி
பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலம், வாத்நகரில் 1950-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி பிறந்தவர்.வரும் 17-ந் தேதி அவரது 71-வது பிறந்த நாள் ஆகும். இந்த பிறந்த நாளை பா.ஜ.க.வினர் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு வருகின்றனர்.குறிப்பாக இந்த நாளில், நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை படைக்க பா.ஜ.க.வினர் விரும்புகின்றனர்.இதற்காக நாடு முழுவதும் அந்த கட்சியினர் பிரமாண்ட பிரசார இயக்கம் நடத்துகின்றனர்.

ஜே.பி.நட்டா தகவல்
இதுபற்றிய தகவல்களை பா.ஜ.க. தலைவர் ேஜ.பி.நட்டா, டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் வெளியிட்டார். 

அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி பிறந்த நாளில், நாடு முழுவதும் மிக அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை படைப்பதற்கு பூத் மட்டத்தில் உள்ள பா.ஜ.க. தொண்டர்கள் உதவுவார்கள்.இந்த சுகாதார திட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிற வகையில் 2 லட்சம் கிராமங்களில் உள்ள 4 லட்சம் தன்னார்வலர்களுக்கு பா.ஜ.க. பயிற்சி அளிக்க உறுதி பூண்டுள்ளது. இதுவரையில் 43 நாட்களில் 6.88 லட்சம் தன்னார்வலர்களுக்கு பா.ஜ.க. பயிற்சி அளித்துள்ளது. இந்த எண்ணிக்கை மிக விரைவில் 8 லட்சத்தை எட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிறப்பு பயிற்சி
இந்த நிகழ்ச்சியின்போது பா.ஜ.க. பொதுச்செயலாளர் தருண் சூக் கூறுகையில், “பிரதமர் பிறந்தநாளின்போது, தடுப்பூசி போடுவதில் முந்தைய சாதனைகளை கட்சித்தொண்டர்கள் முறியடித்துக்காட்டுவார்கள். கொரோனா தொற்று மேலும் பரவுவதைத் தடுப்பதற்கான இந்த சுகாதார தன்னார்வலர்கள் திட்டத்தில் 18 ஆயிரம் டாக்டர்கள் சேர்ந்துள்ளனர். சுகாதார தன்னார்வலர்களுக்கான சிறப்பு பயிற்சியை பா.ஜ.க. அடுத்த மாதம் வழங்கும்” என தெரிவித்தார்.

வழக்கமாக பிரதமர் மோடியின் பிறந்த நாளை பா.ஜ.க. வினர் சேவை வாரமாக கொண்டாடுவது வழக்கம்.

Next Story