மராட்டியத்தில் மேம்பாலம் இடிந்தது; காயமடைந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்வு


மராட்டியத்தில் மேம்பாலம் இடிந்தது; காயமடைந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்வு
x
தினத்தந்தி 17 Sep 2021 4:24 AM GMT (Updated: 17 Sep 2021 4:24 AM GMT)

மராட்டியத்தில் மேம்பால கட்டுமான பணியில் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் காயமடைந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்து உள்ளது.

புனே,

மராட்டியத்தின் மும்பை நகரில் பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் மேம்பால கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.  இதில், தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 4.40 மணியளவில் கட்டுமான பணி நடைபெற்று வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.  இந்த விபத்தில் தொழிலாளர்கள் 9 பேர் காயமடைந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும், நகர போலீசார் மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றுள்ளனர்.

அவர்கள் மேம்பால இடிபாடுகளின் கீழ் யாரும் சிக்கியுள்ளனரா? என்று தேடும் பணியில் ஈடுபட்டனர்.  தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்றது.  இதில், கூடுதலாக 5 பேர் மீட்கப்பட்டனர்.  இதனால் காயமடைந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்து உள்ளது.

இதுபற்றி போலீஸ் துணை ஆணையாளர் மஞ்சுநாத் சிங்கே கூறும்போது, இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை.  யாரும் காணாமல் போகவில்லை என்று கூறியுள்ளார்.


Next Story