இலவச சிகிச்சை விவகாரம்: ஜிப்மர் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம்


இலவச சிகிச்சை விவகாரம்: ஜிப்மர் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம்
x

இலவச சிகிச்சை விவகாரத்தில் ஜிப்மர்ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜிப்மருக்கு எதிர்ப்பு
புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் இலவச சிகிச்சை பெற வருபவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்பதை நிரூபிக்க சிவப்பு ரேசன்கார்டுகளை கொண்டுவர வேண்டும் என்றும், வேறு எந்தவித ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது என்றும், இந்தநடைமுறை வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஜிப்மரின் இந்த உத்தரவை வாபஸ்பெற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி உள்ளன. இதுதொடர்பாக விசாரிக்கவும், பழைய நடைமுறையே தொடரவும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தள்ளுமுள்ளு
இந்தநிலையில் ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து, முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்திருந்தனர். இதற்காக நேற்று அவர்கள் ஜிப்மர் அருகே கூடினார்கள். அங்கிருந்து தலைவர் வீரமோகன் தலைமையில் ஊர்வலமாக சென்றனர். ஜிப்மர் நுழைவுவாயில் அருகே சென்றபோது, போலீசார் தடுப்புகளை அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இருப்பினும் தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் செல்ல முயன்றனர். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் தடுப்புகளை தள்ளிட்ட போராட்டக்காரர்கள் வேகமாக நுழைவாயில் அருகே சென்றனர். அப்போது ஜிப்மர் காவலர்கள் நுழைவு வாயிலை இழுத்து மூடினார்கள்.

கைது
இதனிடையே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக துணைத்தலைவர் இளங்கோ, மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சாமி நாதன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் புதுவை தலைவர் ஸ்ரீதர் உள்பட சுமார் 50 பேரை கைது செய்தனர். கைதான அனைவரும் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story