அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் இன்று கூடுகிறது பஞ்சாப் மந்திரிசபை!


அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் இன்று கூடுகிறது பஞ்சாப் மந்திரிசபை!
x
தினத்தந்தி 29 Sep 2021 6:05 AM GMT (Updated: 29 Sep 2021 6:05 AM GMT)

பஞ்சாப் மாநில மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி சரண்ஜித் தலைமையில் இன்று நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சண்டிகார், 

பஞ்சாப் முதல்-மந்திரியாக இருந்து வந்த கேப்டன் அமரிந்தர் சிங்குக்கும், அவரது மந்திரிசபையில் முதலில் இடம்பெற்று பின்னர் விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த சுழலில் அங்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. எனவே அமரிந்தர் சிங்குக்கும், சித்துவுக்கும் உள்ள மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வரும் விதமாகவும், சித்துவை சமாதானப்படுத்தும் விதமாகவும், அவரை மாநில காங்கிரஸ் தலைவராக கட்சித்தலைவர் சோனியா காந்தி நியமித்தார்.

இதையடுத்து அவர் கடந்த ஜூலை மாதம் 23-ந்தேதி மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்றார். அதே நேரத்தில் அதிரடி திருப்பமாக அமரிந்தர் சிங்குக்கு எதிராக பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். பதவி பறிக்கப்படும் சூழல் உருவானதால், அமரிந்தர் சிங் அதிரடியாக தாமாகவே முதல்-மந்திரி பதவியை விட்டு விலகினார். சித்துவுக்கு எதிராக கருத்து வெளியிட்டார். சித்துவை புதிய முதல்-மந்திரி ஆக்க ஆதரவு தெரிவிக்க மாட்டேன் என வெளிப்படையாக அறிவித்தார்.

அடுத்த திருப்பமாக தலித் வகுப்பை சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முதல்-மந்திரி ஆக்கினார். இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் நவ்ஜோத் சிங் சித்து நேற்று திடீரென பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தனது பதவி விலகல் கடிதத்தை அவர் கட்சித்தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பினார். 

பஞ்சாப்பில் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி, புதிதாக பதவி ஏற்றுள்ள தனது மந்திரிகளுக்கு நேற்று இலாகாகளை ஒதுக்கிய நிலையில், சித்து பதவி விலகி இருப்பதால், இலாகா ஒதுக்கீட்டில் சித்துவுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதற்கிடையே சித்துவின் ராஜினாமாவையடுத்து, அவருக்கு ஆதரவாக பெண் மந்திரி ரஷியா சுல்தானா பதவி விலகினார். முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னிக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தில் அவர் சித்துவுக்கு ஆதரவாக பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். முன்னதாக ரஷியா சுல்தானாவுக்கு குடிநீர் வினியோகம், சுகாதாரம், சமூக பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, அச்சு, எழுதுபொருள் இலாகாகள் ஒதுக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில் மாநில மந்திரிசபை மற்றும் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பத்திற்கு நடுவே, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்ய மந்திரிசபையின் அவசரக் கூட்டத்திற்கு முதல்-மந்திரி சரண்ஜித் சிங் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

Next Story